எத்தியோப்பியாவின் Hayli Gubbi ஹேலி குப்பி எரிமலை வெடித்ததில் எழுந்த சாம்பல் புகை, இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி வேகமாகப் பரவி வருகிறது. ஹேலி குப்பி எரிமலை வெடிப்பு இந்தியாவில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
வடக்கு எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி எரிமலை நீண்ட காலமாக செயலற்ற நிலையில் இருந்தது. கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்குப் பின் கடந்த நவம்பர் 23ம் தேதி எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. சுமார் 14 கிலோமீட்டர் உயரத்துக்கு எழுந்த சாம்பல் புகையை ஏமன் உள்ளிட்ட அரபு நாடுகளில் இருந்தும் பார்க்க முடிந்தது.
இந்த எரிமலை வெடிப்பால் 6000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நகரங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஹவாயின் மௌனா லோவாவைப் போல ஒரு கேடய எரிமலையான ஹெய்லி குப்பி எரிமலையின் உச்சியிலிருந்து சாம்பல் புகைகள் பொங்கியெழுந்து பரவும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.
அதிர்ஷ்டவசமாக, இந்த எரிமலை வெடிப்பில் உயிரிழப்புகள் இல்லையென்றாலும் காற்றெங்கும் அடர்த்தியான சாம்பல் புகை பரவி வானமே இருண்டு போனது. இந்த எரிமலை வெடிப்பில், இருந்து சிதறிய சாம்பல் சிவப்பு கடல் வழியாக ஏமன் மற்றும் ஓமன் நாடுகளில் பரவி வடக்கு அரேபிய கடல் பகுதி வழியாக இந்தியாவை வந்தடைந்துள்ளது.
மேற்கு ராஜஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த சாம்பல் புகை, மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வடகிழக்கே நகர்கிறது என்று IndiaMetSky Weather தெரிவித்துள்ளது. சிறிது நேரம் வானம் விசித்திரமாகவும் வேடிக்கையாகவும் தோன்றலாம் என்றும், சுமார் 25,000 முதல் 45,000 அடி உயரத்தில் சாம்பல் பரவுவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லியின் சில பகுதிகளில் பரவிய எரிமலை சாம்பல், குஜராத் வழியாக மகாராஷ்டிரா,டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் பகுதிகளுக்கு நகரும் என்றும், பிறகு இமயமலை சாரலில் உள்ள பகுதிகளுக்குப் பரவும் என்று வானிலை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த எரிமலை சாம்பலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சல்பர் டை ஆக்சைடு போன்றவை விமானங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், கிழக்கு ஆப்பிரிக்கா, செங்கடல், வளைகுடா நாடுகளின் விமான போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் துலூஸில் உள்ள எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் அடுத்தடுத்த ஆபத்தான நிலைமைகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
எரிமலை சாம்பல் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்கவும், அந்த இடங்களுக்கான விமான பயணத்தை மாற்றவும், எரிப்பொருள் நிரப்புவதற்கான இடங்களை தேவைப்பட்டால் மாற்றவும் கேபினுள் புகை ஏற்பட்டால் உடனடியாகத் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் எரிமலை சாம்பல் தொடர்பான நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதை உறுதிசெய்யவும், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் வானிலை தரவுகள் பற்றித் தெரிந்து கொள்ள DGCA ஆபரேட்டர்களுடன் தொடர்பில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது. ஏற்கெனவே டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் காற்று மாசினால் மோசமாகப் பாதிப்படைந்துள்ள நிலையில் இந்த எரிமலை சாம்பல் மேலும் சுற்றுச்சூழலைப் பாதிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
















