எக்ஸ் வலைதளத்தில் கொண்டு வரப்பட்ட புதிய அப்டேட், இந்திய அரசியலில் புயலை கிளப்பியிருக்கிறது. இந்து சமூகத்திற்கு எதிரான கருத்துகள் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து பதிவிடப்படுவது உறுதியாகி இருப்பதாகப் பாஜக கூறியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் மட்டும் சர்ச்சைக்குப் பெயர் போனவர் அல்ல… அவருக்குச் சொந்தமான எக்ஸ் வலை தளமும் தான் என்றும் கூறும் அளவுக்கு இந்திய அரசியலில் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
எக்ஸ் தளத்தில் “ABOUT THIS ACCOUNT” என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட புதிய அப்டேட் விவாதத்தைத் தூண்டியுள்ளது. எக்ஸ் வலைதளத்தின் “ABOUT THIS ACCOUNT” அம்சம் மூலம், பயனர்கள் எந்த இடத்திலிருந்து அக்கவுண்ட் தொடங்கினார்கள், USER NAME எத்தனை முறை மாற்றப்பட்டது, எக்ஸ் செயலி எங்கிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது என்பதை அறிய முடியும்.
இதில் என்ன சர்ச்சை இருக்கிறது என யோசிக்கிறீர்களா? நிச்சயம் இருக்கிறது. இந்து சமூகத்தினருக்கு எதிரான கருத்துகளும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான கருத்துகளும், வெளிநாடுகளில் இருந்து பதிவிடப்படுவதாகப் பாரதிய ஜனதா கட்சி நீண்ட காலமாகக் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதற்கு ஆதாரம் கிடைத்திருக்கிறது.
குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரரான பவன் கெராவின் எக்ஸ் தளம், அமெரிக்காவில் இருந்து தொடங்கப்பட்டதும், மகாராஷ்டிரா காங்கிரஸின் அதிகாரப்பூர்வ அக்கவுண்ட் அயர்லாந்திலிருந்து தொடங்கப்பட்டதும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இதுமட்டுமல்ல, இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகள், தெற்கு ஆசிய நாடுகளில் இருந்து பதிவிடப்பட்டதும் அம்பலமாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்குப் பாகிஸ்தான் மீது எப்போதும் கரிசனம் இருக்கிறது எனப் பாஜக குற்றம்சுமத்தும் நிலையில், அதற்கும் வலுவான ஆதாரம் கிட்டியிருக்கிறது.
‘Diya Sharma’ and ‘Yashita Nagpal என்ற பெயரில் பாகிஸ்தானில் தொடங்கப்பட்ட எக்ஸ் கணக்குகள், பாஜகவையும், மத்திய அரசையும் நீண்ட நாட்களாக வசைபாடி இருக்கின்றன. அதிலும், ‘Yashita Nagpal அக்கவுண்டில், வெளியிடப்பட்ட பதிவு தான் பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
“ABOUT THIS ACCOUNT” அம்சம் கொண்டு வரப்பட்ட பிறகு வெளியிடப்பட்ட அந்தப் பதிவில், காங்கிரஸ் கட்சி ஆன்லைன் பிரச்சாரத்திற்கு வேலைக்கு எடுத்ததாகவும், நல்லவேளையாகப் புதிய அம்சம் வருவதற்கு முன்னே LOCATION-ஐ மாற்றிவிட்டேன் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், அக்கவுண்ட் எங்கிருந்து தொடங்கப்பட்டது என்ற விவரத்தில் பாகிஸ்தான் என்றே காட்டப்படுவதால், உண்மை புலப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பாரதிய ஜனதா தரப்பில் இருந்து பல்வேறு கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. பாஜக ஐடி பிரிவுத் தலைவர் அமித் மால்வியா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தியாவின் நன்மதிப்பை கெடுத்து, வதந்திகளை பரப்பும் காங்கிரஸ் கட்சியின் தேச விரோத செயல்கள் கண்டறியப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்து மதத்திற்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும், சமூக பிளவை ஏற்படுத்தும் வகையிலும் போடப்பட்ட பதிவுகள், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து பதிவிடப்பட்டது அம்பலமாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் பிரிதி காந்தி போன்ற தலைவர்களும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என விமர்சனத்தை முன்வைத்துள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைமை இந்த விவகாரத்தை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
















