குஜராத்தி மொழி திரைப்படமான “லாலோ கிருஷ்ணா சதா சகாயதே” பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடுகிறது. போட்ட பணத்தை விட 14 ஆயிரம் சதவீதம் லாபம் பார்த்திருக்கிறது. அலசலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்றாலே பாலிவுட், கோலிவுட், டோலிவுட் தான் நினைவுக்கு வரும். ஏனென்றால் ரஜினி, கமல், விஜய், அஜித், ஷாருக்கான், சல்மான் கான், பிரபாஸ், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு என நட்சத்திர பட்டாளங்கள் இங்கு அதிகம்.
இவர்களின் படங்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காகவே ரசிகர்கள் எவ்வளவு விலை கொடுத்தும் டிக்கெட் வாங்க தயாராக இருப்பார்கள். இப்படி, மூன்று திரையுலகம் மட்டுமே கொடி கட்டி பறந்த நிலையில், கேஜிஎப் திரைப்படம்மூலம் அந்தப் பட்டியலில் இணைந்தது கன்னட திரையுலகமான SANDALWOOD.
தரமான படம் கொடுத்தால் போதும், எந்த மொழியாக இருந்தாலும் PAN INDIA ஹிட் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக மாறியது ராக்கி பாயின் KGF. இந்த வழியை பின்பற்றிக் குஜராத்தி மொழி திரைப்படமான “லாலோ கிருஷ்ணா சதா சகாயதே” . தற்போது பாக்ஸ் ஆபிஸில் கால் தடம் பதித்திருக்கிறது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எல்லாம் இந்தப் படம் வெளியாகவில்லை.
50 லட்சம் ரூபாய் மட்டுமே பட்ஜெட். இயக்குனர் Ankit Sakhiya மட்டுமே படத்திற்கு அடையாளம். தமிழ் சினிமாவிலேயே சிறுபடங்களுக்கு அவ்வளவாக ஆதரவு கிடைப்பதில்லை எனும்போது, குஜராத்தியில் சொல்லவா வேண்டும். ஆரம்பத்தில் திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் இல்லை.
முதல் வாரத்தில் 26 லட்சம், இரண்டாவது 29 லட்சம், மூன்றாவது வாரத்தில் 43 லட்சம் மட்டுமே கலெக்சன். நான்காவது வாரத்தில் இருந்து தான் “லாலோ கிருஷ்ணா சதா சகாயதே” படத்துக்கு ஜாக்பாட் அடிக்கத் தொடங்கியது. படக்குழுவே ஆச்சரியப்பட்டுப் போகும் அளவுக்கு 10 கோடி வசூல்.
5-வது வாரத்தில் 25 கோடி, 6-வது வாரத்தில் 25 கோடி எனக் கலெக்ஷன் கூடிக்கொண்டே போக, குஜராத்தி மொழி திரைப்படத்திற்கு PAN INDIA அளவில் கவனம் கிடைத்துள்ளது.
குஜராத்தி மொழியில் ஏற்கனவே சாதனை படைத்த சால் ஜீவி லய்யே படத்தின் 50 கோடி வசூலை, “லாலோ கிருஷ்ணா சதா சகாயதே” அசால்டாக முறியடித்துள்ளது. விரைவில் 100 கோடி அடிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அம்மாநில திரையுலகத்தினரும் உற்சாகத்தில் மிதக்கின்றனர்.
















