இந்தியாவும் பிரான்சும் இணைந்து HAMMER ரக ஏவுகணைகளை தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்தக் கூட்டு முன்னெடுப்பு மேக் இன் இந்தியா திட்டத்தில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
பாஜக அரசு கொண்டு வந்த மேக் இன் இந்தியா திட்டம், பாதுகாப்புத்துறை தற்சார்பு நிலையை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன்படி, ராணுவ பலம் வாய்ந்த நாடுகளுடன், ஒப்பந்தம் மேற்கொள்ளும் மத்திய அரசு, உள்நாட்டிலேயே தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
அதன் ஒருபகுதியாகப் பிரான்ஸ் நாட்டுடன் சேர்ந்து HAMMER ரக ஏவுகணைகளை தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் துல்லியமாக தாக்கி அழிப்பதற்கு HAMMER ஏவுகணைகள் உதவியதால் இருநாடுகளுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதன்படி, இந்தியாவின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும், பிரான்ஸின் Safran Electronics and Defence நிறுவனமும் இணைந்து HAMMER ஏவுகணைகளை தயாரிக்க உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இந்தியா HAMMER ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டியது.
அங்குத் தொடங்கிய பயணம், இருநாடுகளும் சேர்ந்து ஏவுகணைகளை தயாரிக்கும் அளவுக்கு இன்று வளர்ந்திருக்கிறது. பிரான்ஸ் கண்டுபிடிப்பில் உருவான HAMMER ஏவுகணைகள், போர் விமானங்களில் இருந்து தரையில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை வாய்ந்தது.
125 கிலோ, 250 கிலோ, 500 கிலோ, 1000 ஆயிரம் கிலோ என நான்கு VARIANT-களில் உருவாக்கப்பட்டிருக்கும் HAMMER ரக ஏவுகணைகள், எடைக்கு ஏற்றார் போல், இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும். நகரக்கூடிய இலக்குகளையும் தாக்கி அழிக்கும் திறன் இருப்பதால், 99 சதவீதம் வச்ச குறி தப்பாது எனத் தெரிவிக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
2008-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்ட ஹாமர் ஏவுகணைகள், தற்போது உக்ரைனுக்கு அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இந்தியாவும் அந்தப் பட்டியலில் இணைகிறது.
நடப்பாண்டின் தொடக்கத்தில் 63 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், 26 ரபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது மேலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதன் மூலம் இருநாடுகளின் ராணுவ உறவு வலுப்பட்டுள்ளது என்பதையே வெளிக்காட்டுகிறது.
















