தண்டையார்பேட்டை, அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவது தொடர்பான டெண்டர் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தூய்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், தனியாருக்கு வழங்குவது என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களின் தூய்மை பணிகள் ஏற்கனவே தனியாருக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும், ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலங்களில் 875 பேருக்கு நியமன உத்தரவுகள் வழங்கியபோதும் 425 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தண்டையார்பேட்டை மற்றும் அண்ணா நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகள் விரைவில் தனியாருக்கு வழங்கப்படும் என்றும், தனியாருக்கு வழங்குவதற்கான டெண்டர் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மாநகராட்சியின் பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்கக் கால அவகாசம் வேண்டும் உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
















