சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தளபதி ஹிட்மாவின் சொந்த கிராமத்தில் புது மணப்பெண்ணை சிஆர்பிஎப் முகாமிற்கு அழைத்துச் சென்று கிராமவாசிகள் ஆசி பெற்ற வீடியோ வைரலாகி உள்ளது.
1981 ஆம் ஆண்டு சத்தீஸ்கரின் சுக்மாவில் பிறந்த மாத்வி ஹிட்மா, மாவோயிஸ்ட் குழுவில் இணைந்த ஒரே பழங்குடியினராகவும் அறியப்படுகிறார். 43 வயதான மாத்வி ஹிட்மா, பாதுகாப்புப் படையினருக்கு எதிராக நடந்த 26 தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்டிருக்கிறார்.
2010 ஆம் ஆண்டு 76 சிஆர்பிஎஃப் வீரர்களை பலி கொண்ட தண்டேவாடா தாக்குதல், 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் உயர் தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்ட ஜிராம் தாக்குதல், 2021ம் ஆண்டு 22 பாதுகாப்புப் படையினர் பலியான சுக்மா – பிஜாப்பூர் மோதல் போன்றவற்றில் ஹிட்மா முக்கிய பங்காற்றியவர்.
தலைக்கு ஒரு கோடி ரூபாய் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு தளபதியான ஹிட்மா, அவரது மனைவி உள்பட 6 பேரை கடந்தவாரம் பாதுகாப்புப் படை சுட்டுக்கொன்றது.
இந்நிலையில் ஹிட்மாவின் சொந்த கிராமமான பவர்தியை சேர்ந்த பழங்குடியின பெண்ணுக்குத் திருமணம் நடைபெற்ற நிலையில் கிராம மக்கள் புதுமணப் பெண்ணை அருகில் உள்ள சிஆர்பிஎப் முகாமிற்கு அழைத்து வந்து வீரர்களிடம் ஆசி பெற்ற வீடியோ வைரலாகி உள்ளது.
















