தங்கம், வெள்ளி, பித்தளை உள்ளிட்டவற்றில் விளக்குகள் வைத்திருந்தாலும் களிமண்ணால் ஆன அகல் விளக்குகள் ஏற்றுவதே கார்த்திகை மாதத்தின் சிறப்பு. தீபத் திருவிழா நெருங்கும் வேளையில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களோ அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துக் காத்திருக்கின்றனர். இதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
டிசம்பர் 3ம் தேதி நாடு முழுவதும் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் அதிக அளவில் அகல் விளக்குகள் தயாரிப்பது வழக்கம்.
அந்த வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாய்க்கன்பட்டி பகுதிகளில் உற்பத்தியாகும் அகல் விளக்குகள் தமிழகம் முழுவதும் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு ஆர்டர்களின் பேரில் அனுப்பப்படுகின்றன. 50 முதல் 250 மில்லி எண்ணெய் கொள்ளளவு கொண்ட அகல் விளக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மேலும், ஒரு முகம், ஐந்து முகம் விளக்கு எனப் பல்வேறு வகையான அகல் விளக்குகளும் தயாரிக்கப்படுகின்றன. அந்தந்த விளக்குகளின் அளவுக்கு ஏற்ப விலை வைத்து விற்கப்படுகின்றன. ஆனால் பண்டிகை காலங்களில் இந்த விலை கட்டுப்படியாகவில்லை எனவும், இதனால் இழப்புதான் ஏற்படுவதாகவும் மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வட மாநிலத்தவர்கள் பிளாஸ்டர் பாரிஸ் போன்ற பொருட்களில் பல்வேறு வடிவங்களில் டிசைன் விளக்குகள் தயாரித்து விற்பதோடு, மண் விளக்குகளின் விலைக்கே தருகின்றனர். மேலும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் களிமண்ணை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர் தொழிலாளர்கள்.
நலவாரியத்தில் பதிவு செய்த 11,500 பேரில் 7000 பேருக்கு மட்டுமே இந்த ஆண்டு மழைக்கால நிவாரணம் வழங்கப்பட்டதாகவும். மீதமுள்ளவர்களுக்கு பல்வேறு காரணங்களை காட்டி தமிழக அரசு நிவாரணம் வழங்காமல் இருப்பதாகவும் மண்பாண்ட தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வரும் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே மண்பாண்ட தொழிலாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. தங்கள் வாழ்வாதாரம் செழிக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
















