ஊருக்கே மின்சாரம் வழங்க வந்தவர்கள் தங்களுக்கு மின்சாரம் இல்லாமல் 40 வருடங்களாகத் தவித்து வருகின்றனர். எங்கே அரங்கேறியுள்ளது இந்தத் துயரம். பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
நீலகிரி மாவட்டம் உதகை மலை அடிவாரத்தில் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மசினகுடி என்ற கிராமத்தில் லேபர் கேம்ப் பகுதியில் சுமார் 35 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் பின்னணிதான் கேட்டாலே அதிர வைக்கிறது. சிங்காரா நீர் மின் நிலைய பணிகளுக்காக ஒப்பந்த முறையில் சிலர் அழைத்து வரப்பட்டனர்.
மசினகுடி லேபர் கேம்ப் பகுதியில் தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டு அவற்றில் தங்கி பணி புரிந்தனர். நீர் மின் நிலையப் பணிகள் முடிந்தவுடன் வேறு எங்குச் செல்வது எனத் தெரியாமல் தற்காலிககுடியிருப்பிலேயே வசிக்கும் நிலை ஏற்பட்டது.
ஒன்றல்ல.. இரண்டல்ல… மூன்று தலைமுறைகளாக லேபர் கேம்ப் பகுதியிலேயே வாழ்ந்து வரும் 35 குடும்பங்களை சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் கடந்த 40 வருடங்களாக மின்சார வசதியின்றி தவிக்கின்றனர்.
நீர் மின் நிலைய பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் வந்த தங்களுக்கு இனி இந்தப் பகுதி தான் சொந்த கிராமம் என நினைத்து ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றையும் இதே முகவரியில் பெற்றுக்கொண்டனர். ஆனால் மின்சாரம் இல்லாததோடு பாதுகாப்பற்ற தகரத்தினால் ஆன குடியிருப்புகளில் வசித்துக் கொண்டு பெரும் இன்னல்களுக்கு மத்தியில் நாட்களை நகர்த்தி வருகின்றனர்.
குடியிருப்புகளை சுற்றி வனப்பகுதி உள்ளதால் வனவிலங்குகளின் அச்சுறுத்தலும் இருக்கிறது. இரவு நேரத்தில் தெரு விளக்கு அடியிலும், மொபைல் ஃபோன் டார்ச் வெளிச்சத்திலும், மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்திலும் அமர்ந்து படிக்க வேண்டிய அவல நிலையும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
சில நாட்களில் மண்ணெணெய் கூடக் கிடைக்காமல் வனப்பகுதியில் இருளில் உயிர் பயத்தில் உழன்று கொண்டிருக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் என அனைவரிடமும் வீடு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கேட்டு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
அங்குள் நீலகிரி மாவட்டத்தில் மின்சாரம் கிடைக்க நீர்மின் நிலையப் பணிகளுக்காக அழைத்து வரப்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவது கொடுமையிலும் கொடுமை. கடைக்கோடி குக்கிராமங்களுக்கு சாலை வசதி, வீடு வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருவதாக மார்தட்டிக் கொள்ளும் தமிழக அரசு இவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதே மிகப்பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
















