விழுப்புரம் அருகே பெண்ணை வன்கொடுமை செய்த திமுக ஒன்றியச்செயலாளரை கைது செய்ய வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவக்கரையில் ஆதவற்ற பெண்ணை வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து திமுக ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் மிரட்டியதாக கூறப்படுகிறது.அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தன்னைக் காப்பாற்றுமாறு அப்பெண் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், அவரை கைது செய்ய கோரியும், குற்றவாளிக்கு துணைபோகும் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணனை கண்டித்தும் அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக செஞ்சி ஒருங்கிணைந்த ஒன்றிய அதிமுக சார்பில் ஆலம்பூண்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதிமுகவினரை காவல்துறையினர் வலு கட்டாயமாக கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல், வல்லம் ஒன்றிய அதிமுக சார்பில் பாலியல் குற்றவாளியான திமுக ஒன்றிய செயலாளரை கைது செய்ய கோரி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதிமுகவினரை காவல்துறையினர் வலு கட்டாயமாக கைது செய்ததால் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
















