தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சித்திக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரியாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஜொள்ளம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெய்சங்கர். இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், சித்ரா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
முதல் மனைவிக்குச் சரவணன் என்ற மகன் உள்ள நிலையில், இரண்டாவது மனைவி சித்ரா மூலம் இரண்டு மகன்கள் உள்ளனர்.
சரவணன் வேலைக்கு செல்லாமல் நாள்தோறும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சித்திக்குப் பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்ததால், ஆத்திரமடைந்த ஜெய்சங்கர், மகன் கோவிந்தராஜ் மற்றும் அன்பரசு ஆகியோருடன் சேர்ந்து சரவணனை செங்கல்லால் அடித்துக் கொலை செய்தார்.
பின்னர் யாரோ அடித்துக் கொன்றுவிட்டதாக நாடகமாடிய ஜெய்சங்கர், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். விசாரணையில் உணமை வெளிவரவே ஜெய்சங்கர் உள்பட மூவரையும் கைது செய்தனர்.
















