இந்தியா தனது போர் விமானங்களுக்கான இஞ்சின்களையும், உயர்ரக STEALTH விமானமான AMCA-வையும் நாட்டிலேயே உருவாக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், ஹைதராபாதில் திறக்கப்பட்டுள்ள புதிய சாஃப்ரன் இஞ்சின் சர்வீஸ் மையம், இந்த முயற்சிக்குப் பெரும் துணையாக உருவெடுக்கவுள்ளது.
இந்தியா தனது போர் விமான இஞ்சின் கனவுக்கு மேலும் ஒருபடி நெருக்கமாகியுள்ளது. நாட்டிற்குள் ஏற்கனவே உள்ள தளங்களைப் பயன்படுத்தி அதுசார்ந்த செயல்முறையை வேகப்படுத்த அரசு சார்ந்த அமைப்புகளை மத்திய அரசு தீவிரமாக உந்தி வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் சாஃப்ரான் ஏர்கிராஃப்ட் இஞ்சின் சர்வீஸ் இந்தியா நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின்போது உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய விமானத்துறை புதிய உயரத்தில் பறக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். சாஃப்ரானின் புதிய மையம் இந்தியாவை உலகளாவிய MRO மையமாக நிலைநிறுத்த உதவும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். உயர் தொழில்நுட்பங்கள் கொண்ட விண்வெளி துறையில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள், இந்த MRO மையம் மூலம் அதிகரிக்கும் எனத் தெரிவித்த பிரதமர் மோடி, சாஃப்ரான் மையத்தின் உலகத்தரம் வாய்ந்த பயிற்சி, அறிவு பரிமாற்றம் மற்றும் இந்திய கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களுடனான கூட்டாண்மைகள், எதிர்வரும் ஆண்டுகளில் முழு MRO சூழலையும் கையாளக்கூடிய திறமையான பணியாளர்களை உருவாக்கும் எனவும் கூறினார்.
இந்திய அமைப்புகளுடன் இணைந்து 5-ம் தலைமுறை போர் விமான இஞ்சின்களை உருவாக்கும் பணியில் சாஃப்ரன் நிலையம் ஏற்கனவே ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்த MRO தளத்தின் மூலம், வெளிநாட்டு சார்பை குறைக்கும் ஒரு முக்கிய மைல் கல்லை இந்தியா எட்டியுள்ளது. இதற்கிடையே, இந்தியாவின் தேசிய 5-ம் தலைமுறை மறைமுகத் திறன் கொண்ட போர் விமானமான AMCA-வின் முன்னோடி மாதிரிகளை வடிவமைத்து உருவாக்குவதற்கான DRDO-வின் திட்டத்தில் பங்கேற்க ஏழு இந்திய நிறுவனங்கள் களமிறங்கின.
அவற்றில் Larson & Turbo, Hindustan Aeronautics Limited, Tata Advanced Systems, Adani Defence உள்ளிட்டவை அடங்கும். இந்த ஏழு நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பகிர்ந்து கொண்டு, தரம் உயர்ந்த ஐந்து AMCA முன்னோடி விமானங்களை உருவாக்கவுள்ளது. அவை உருவாக்கப்பட்ட பின்னர் அதன் உற்பத்தி உரிமைகள் அந்நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பும், 125-க்கும் மேற்பட்ட விமானங்களை வழங்கும் இலக்கும் கொண்ட AMCA திட்டத்தின் முதல் விமானங்கள் 2035-க்கு பிறகே இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தேஜஸ் விமானங்களுக்கு அமெரிக்க GE இஞ்சின்களை பெறுவது தாமதமாகி வருவதால், ஜெட் இன்ஜின்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சிக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இந்தச் சூழலில், சாஃப்ரான் ஏர்கிராஃப்ட் இஞ்சின் சர்வீஸ் இந்தியா MRO நிலையத்தின் துவக்கம், இந்தியாவின் வான்வெளி துறையில் தன்னிறைவு பெறும் பயணத்தில் ஒரு தீர்க்கமான முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. உயர்தர இஞ்சின்களுக்கு நாட்டுக்குளேயே பராமரிப்பு, பழுது பார்க்கும் திறனை உருவாக்குவதோடு, திறமையான மனித வளத்தையும் உருவாக்கி, சாஃப்ரன் போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களுடன் தொழில்நுட்ப கூட்டணி அமைப்பதற்கும் இந்த மையம் உதவும் எனத் துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது, AMCA திட்டத்துக்குத் தேவையான இஞ்சின் தேவையை நேரடியாகப் பலப்படுத்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த தலைமுறை மறைமுக போர் விமானங்களை நாட்டிலேயே உருவாக்கும் இந்தியாவின் முயற்சிக்கு, இந்தச் செயல்திறன் உட்கட்டமைப்பு கால தாமதங்களை குறைத்து, செயல்முறைத் தயார் நிலையை உயர்த்தி, அடுத்த தலைமுறை வான்போர்த் திறனில் இந்தியாவின் மூலதன இலக்குகளை நிலைநிறுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















