ஆயுள் காப்பீட்டு தொகையை பெறுவதற்காகக் காமெடி நடிகர்கள் கவுண்டமணி – செந்தில் நடத்திய நாடகத்தைப் போலொரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
கர்முக்தேஷ்வரில் நான்கு பேர் துணியால் சுற்றப்பட்ட உடலைக் கொண்டு வந்து தகனம் செய்ய முயன்றனர். அப்போது இறுதிச் சடங்குச் செய்பவர், துணியை அகற்றுமாறு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் வலுக்கட்டாயமாகத் துணி அகற்றப்பட்டபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. துணிக்கு உள்ளே இருந்தது சடலம் அல்ல பொம்மை.
தொடர்ந்து அவர் அளித்த தகவலின் பேரில் சென்ற போலீசார், டெல்லியைச் சேர்ந்த கமல் சோமானி, ஆஷிஷ் குரானா ஆகியோரைக் கைது செய்தனர்.
மற்ற இருவரும் தப்பியோடினர். விசாரணையில் மிகப்பெரிய நாடகம் அரங்கேற்றப்பட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கமலுக்கு 50 லட்சம் ரூபாய் கடன் இருந்தது.
இதனை அடைப்பதற்கு அவரது நண்பர் அன்ஷூலின் ஆவணங்கள் மூலம் ஆயுள் காப்பீடு பதிவு செய்து அதில் தனது பெயரை நாமினியாகச் சேர்த்துள்ளார்.
யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் அதற்கான பணத்தையும் செலுத்தி வந்துள்ளார். இதையடுத்து அன்ஷூல் இறந்ததாகக் கூறி பொம்மைக்கு இறுதிச் சடங்கு செய்து இறப்பு சான்றிதழை வைத்துக் காப்பீட்டு தொகையைப் பெறுவதே கமலின் திட்டமாக இருந்தது தெரியவந்துள்ளது.
















