தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, கோவை அன்னூரில் இடிந்து விழுந்த கிணற்றின் தடுப்புச்சுவரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அன்னூரின் பிரதான சாலையோரத்தில் உள்ள கிணறு சமீபத்தில் உள்வாங்கியது. இதனிடையே அதனை சுற்றி அமைந்திருந்த தடுப்புச் சுவரும் இடிந்து விழுந்தது.
இந்தச் சாலை மாணவ, மாணவிகள் எனப் பலரும் நாள்தோறும் பயன்படுத்தும் சாலை என்பதால், அப்பகுதி மக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவி வந்தது.
மேலும், அந்தக் கிணற்றுக்கு அருகே அமைந்துள்ள வீடுகளும் சரிந்து விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் வசித்து வந்தனர்.
இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சி, மக்களுக்கும், அரசுக்கும் எடுத்துச் சொன்னது. இதன் எதிரொலியாக அங்குத் தடுப்புச் சுவர் அமைக்கப் பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன் முதற்கட்ட பணியாகக் கிணற்றில் இருக்கும் தண்ணீர் முழுவதையும் ஊழியர்கள் வெளியேற்றினர். விரைவில் தடுப்பு சுவர் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















