இந்தியாவில் வாழும் “பெனே மேனஷே” யூதர்களை தங்கள் நாட்டில் குடியேற்றி, சர்ச்சைக்குரிய பகுதிகளில் குடியிருப்பை அதிகரிக்கவும், எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தவும் இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…
இந்தியாவில் உள்ள மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில், யூதர்களான “பெனே மேனஷே” பிரிவைச் சேர்ந்த 5 ஆயிரத்து 800 பேர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப் புதிய திட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு வகுத்துள்ளது. இவர்களை லெபனான் எல்லைக்கு அருகிலுள்ள வட கலிலேய பகுதிகளில் குறிப்பாக நொஃப் ஹா கலில் என்ற நகரிலும் அதனை சுற்றிய இடங்களிலும் குடியேற்ற இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது.
மத அடிப்படையிலான மீள்வாழ்வு ஏற்பாடு மட்டுமல்லாமல், கலிலேயை யூதமயமாக்கி அங்கு யூதர்களின் இருப்பை அதிகரிப்பது இந்த முடிவின் முக்கிய நோக்கமாகப் பார்க்கப்படுகிறது. லெபனான் எல்லை பகுதியின் தேசிய பாதுகாப்பையும் இது வலுப்படுத்தும் எனவும் இஸ்ரேல் அரசு விளக்கியுள்ளது.
அந்தப் பகுதிகளில் அரபு மக்கள் தொகை குறிப்பிடத் தக்க அளவில் இருந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்புடன் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக, கடந்த சில ஆண்டுகளில் அங்கிருந்து ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் வெளியேற வேண்டிய நிலை உருவானது. இந்நிலையில், இந்தப் புதிய திட்டத்தை, வடக்கு மற்றும் கலிலேயை பலப்படுத்தும் முக்கியமான சையோனிச தீர்மானம் எனப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் ஆயிரத்து 200 பேர் 2026-ம் ஆண்டு இறுதிக்குள் இஸ்ரேலுக்கு செல்வார்கள் எனவும், மீதமுள்ளவர்கள் 2-ம் கட்டமாக 2030-ம் ஆண்டுக்குள் இடம்பெயர்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைந்துபோன 10 இஸ்ரேலிய கோத்திரங்களில் ஒன்றான மேனஷே கோத்திரத்தின் சந்ததியினர் எனத் தங்களை பெனே மேனஷே சமூகத்தினர் கூறிக்கொள்கின்றனர். கி.மு 722-ல் இஸ்ரேல் ராஜ்ஜியம் வீழ்ந்தபின்னர் தங்கள் மூதாதையர்கள் அங்கிருந்து மத்திய ஆசியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் எல்லை பகுதிகளுக்கு நாடு கடத்தப்பட்டதாக அவர்கள் நம்புகின்றனர்.
பெனே என்ற சொல் குழந்தைகளையும், மேனஷே என்ற சொல் யாக்கோபின் பேரனான மனசேவையும் குறிப்பதாக, இந்த சமூகம் குறித்து ஆய்வு செய்யும் ஐஐடி டெல்லி சமூகவியல் ஆராய்ச்சியாளர் வான்லல்ஹ்மங்கைஹா (Vanlalhmangaiha) விளக்கியுள்ளார். 1950-ம் ஆண்டு இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மறு வருகை சட்டத்தின் கீழ், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், யூதர்களும், யூத மதத்தை ஏற்றவர்களும் இஸ்ரேலுக்கு சென்று குடியேறி குடியுரிமை பெற முடியும்.
இதன் அடிப்படையில் கடந்த இரு தசாப்தங்களாகச் சுமார் 4 ஆயிரம் பெனே மேனஷே சமூகத்தினர் ஏற்கனவே இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்துள்ளனர். புதிதாக வரவுள்ள இந்தக் குழுவினரையும், இஸ்ரேல் தலைமை ரப்பினேட் கண்காணிப்பில் ஆர்த்தடாக்ஸ் ஒப்புதல் மாற்று சடங்குகளை முடித்தபின், வட கலிலேய பகுதிகளில் குடியேற்றவுள்ளனர்.
லெபனான் எல்லை அருகாமை, அண்மை கால போர் சூழல், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றின் குறைபாடு போன்ற காரணங்களால், ஏற்கனவே அப்பகுதி பல ஆண்டுகளாகப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
அதே நேரத்தில், இந்தியாவில் வசித்து வரும் ஒரு யூத சமூகத்தினர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின், தங்கள் மூதாதையரின் தேசம் என நம்பப்படும் நிலப்பகுதிக்குத் திரும்பும் முடிவுக்கு வந்துள்ளனர்.
பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட, சிக்கல்கள் சூழ்ந்துள்ள கலிலேய பகுதிகளை, தற்போது பெனே மேனஷே சமூக யூதர்களால் மீண்டும் நிரப்ப முயலும் இஸ்ரேலின் திட்டம் கைகூடுமா என்பது காலம் தீர்மானிக்க வேண்டிய கேள்வியாக உள்ளது.
















