அடுத்த 10 ஆண்டுகளில் ராணுவத்துக்கு தேவையான பெரும்பாலான பாதுகாப்பு உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் இலக்குடன், பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
இந்தியா பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் பிற நாடுகளை அதிகம் சார்ந்திருக்காமல், தனது தேவைகளை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஆத்மநிர்பர் பாரத் என்ற சுயநிறைவு திட்டத்தை முன்னெடுத்தது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதும், மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப்புகள், MSME-க்கள், விவசாயம், பாதுகாப்பு, உட்கட்டமைப்பு, டிஜிட்டல் இந்தியா போன்ற பல துறைகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதும் இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரித்து, வெளிநாட்டு இறக்குமதிகளை குறைத்து, உலக சந்தையில் இந்தியாவை ஒரு வலுவான, போட்டித்திறன் கொண்ட பொருளாதார சக்தியாக உருவாக்குவதையே இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியா தனது பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தியை வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் ராணுவத்திற்கு தேவையான பெரும்பாலான உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாகப் பேசிய பாதுகாப்புத்துறை செயலர் ராஜேஷ் குமார் சிங், இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் இறக்குமதி சார்பு குறையும் எனவும், இன்னும் சில ஆண்டுகளில் பெரும்பாலான உபகரணங்கள் இந்திய தயாரிப்பாகவே இருக்கும் என்றும் தெரிவித்தார். பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய உபகரணங்களே பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் சார்பு அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
பணத்தட்டுப்பாடு காரணமாகச் சேவை காலம் முடிந்தும் அந்த உபகரணங்களை மாற்றாமல் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய சூழல் இருப்பதாகவும் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்தார். இவை அனைத்தையும் மீறித் தற்போது பாதுகாப்பு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 80 சதவீதத்திற்கும் அதிகமான தொகை இந்தியாவிற்குளேயே செலவிடப்பட்டு வருவதாகக் கூறிய ராஜேஷ் குமார் சிங், ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 75 சதவீதம் தொகையை உள்நாட்டிலேயே செலவிட வேண்டும் என்ற அரசின் இலக்கை இது தாண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த நிதியாண்டில் பாதுகாப்பு துறைக்கான செலவில் கிட்டத்தட்ட 85 முதல் 86 சதவீத தொகை இந்திய நிறுவனங்களிடமே செலவிடப்பட்டுள்ளது. குறிப்பாக 2023 – 2024 நிதியாண்டில் மொத்த பாதுகாப்புதுறை உற்பத்தி 1 லட்சத்து 54 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ள நிலையில், அதில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 434 கோடி மதிப்பிலான உற்பத்தி முழுவதும் உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் நடந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014 – 2015-ம் நிதியாண்டில் இது 46 ஆயிரத்து 429 கோடியாக இருந்ததை ஒப்பிட்டுப் பார்த்தால், பாதுகாப்பு துறையின் வளர்ச்சி 174 சதவீத உயர்வு கண்டுள்ளதை இது காட்டுகிறது. இதற்குட்பட்ட இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதியும் புதிய உயரத்தை எட்டியுள்ளது. குறிபபக 2014-ம் ஆண்டு ஆயிரம் கோடிக்கும் குறைவாக இருந்த பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி, 2024-ம் நிதியாண்டில் 23 ஆயிரத்து 622 கோடியாக உயர்ந்துள்ளது.
எனினும் ஜெட் இஞ்சின் போன்ற சில உயர் தொழில்நுட்ப துறைகளில் 100 சதவீத சுயநிறைவை பெறுவது கடினம் என்பதால், நம்பகமான சில வெளிநாடுகளின் விநியோக சங்கிலியை இந்தியா சார்ந்திருக்க வேண்டியிருக்கும் எனத் துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பல முதலீட்டாளர்கள் பாதுகாப்பு துறைகளில் செயல்படும் ஸ்டார்ட் அப்நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்து வரும் நிலையில், அமெரிக்காவின் CIA போல் அரசு தனியாக வெஞ்சர் கேபிடல் நிறுவனம் தொடங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, மத்திய அரசின் இது போன்ற முயற்சிகளின் பலனாகப் பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியா வரலாறு காணாத உயரத்தை எட்டியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு பட்ஜெட்டை இந்திய நிறுவனங்களுக்கு அதிகம் வழங்குவது, புதிய தொழில்நுட்பம் கொண்ட நிறுவனங்களை தேர்வு செய்து கடன்கள், ஆர்டர்கள் வழங்குவது போன்ற பணிகளை அரசு செய்வதன் மூலம் பாதுகாப்பு துறைக்கான முதலீடுகள் படிப்படியாக இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஏற்கனவே சுமார் 16 ஆயிரம் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதுகாப்பு துறையில் முக்கிய பங்கு வகித்து, உள்நாட்டு பாதுகாப்பு திறனை வலுப்படுத்தி வருகின்றன. அதனடைப்படையில் இதுவரை 462 நிறுவனங்களுக்கு 788 தொழில் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில் “ஆத்மநிர்பர் பாரத்” திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறையில் இந்தியா எடுத்திருக்கும் இந்த நடவடிக்கைகள், நாட்டைப் பாதுகாப்பு உபகரணங்களில் வெளிநாடுகளை குறைவாகவே சார்ந்திருக்கும் ஒரு சுயநிறைவு பெற்ற சக்தியாக மாற்றும் திசையில் நகர்த்திக் கொண்டிருக்கின்றன.
உள்நாட்டு நிறுவனங்களின் பங்கு, ஏற்றுமதி உயர்வு, ஸ்டார்ட் அப்புகள் மற்றும் MSME-களின் வளர்ச்சி ஆகியவை தொடர்ந்தால், வரும் ஆண்டுகளில் இந்தியா உலக பாதுகாப்பு சந்தையிலும் ஒரு முக்கிய மையமாக உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
















