காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு அரசியல் அறிவே இல்லை எனச் சோனியா காந்தியின் ஆலோசகரின் மகன் பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ், 61 தொகுதிகளில் போட்டியிட்டு 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனை, மறைந்த காங்கிரஸ் எம்பியும், சோனியாகாந்தியின் ஆலோசகருமான அகமது படேலின் மகன் பைசல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆங்கில தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த அவர், ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு அரசியல் அறிவே இல்லை எனவும், பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு அவர்கள்தான் காரணம் என்றும் சாடியுள்ளார்.
ராகுல், பிரியங்காவை விட 25 மடங்கு தகுதியான மற்றும் திறமையான நபர்கள் காங்கிரஸில் உள்ளதாகக் கூறிய பைசல், சசிதரூர் போன்றோரிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டு சோனியா குடும்பத்தினர் ஒதுங்கிச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
















