தஜிகிஸ்தானில் தங்கச் சுரங்கத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 3 சீனர்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம், சீனா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே புதிய விரிசலை உருவாக்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் சுமார் 30 சதவீதத்துக்கும் மேல் தஜிகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட தாஜிக் வம்சாவளியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தலிபான்கள் ஆட்சியை எதிர்த்து வருகிறார்கள். தாஜிக் மக்களின் கிளர்ச்சி குழுவின் தலைவர்களில் பலர் தஜிகிஸ்தானில் உள்ளனர் என்று தாலிபான்கள் நம்புகின்றனர்.
இது தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. ஏற்கனவே, ரஷ்யா, தஜிக்கிஸ்தான், கஜகஸ்தான், ஆர்மீனியா, கிர்கிஸ்தான் மற்றும் பெலாரஸ் உள்ளிட்ட நாடுகள் தங்கள் பாதுகாப்புக்காக, Collective Security Treaty Organization என்ற பெயரில் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பை நடத்தி வருகின்றன. உறுப்பு நாடுகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையில், கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு சார்பில் இராணுவ மற்றும் நிதி உதவிகள் வழங்கப்படுகிறது.
இதில் ரஷ்யா தவிர எந்த நாடும் ஆப்கானில் தலிபான் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்புக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லையில் தலிபான்களால் அச்சுறுத்தல் உள்ளது என்றும், எனவே அந்த எல்லைகளில் ராணுவ பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப் பட்டது.
அதன்படி, இருநாடுகளுக்கும் இடையேயுள்ள 1300 கிலோமீட்டர் எல்லையில் ராணுவத் துருப்புகள் குவிக்கப் பட்டுள்ளன. முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தான் பெரிதும் சீன மூலதனத்தையே நம்பியுள்ளது. 2007 முதல் சுமார் 2.87 பில்லியன் டாலர் மதிப்பில் தஜிகிஸ்தானின் சுரங்கம், போக்குவரத்து மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் சீனா முதலீடு செய்துள்ளது.
தஜிகிஸ்தானில் உள்ள Zijin Mining, TALCO Gold போன்ற சீன நிறுவனங்கள், தங்கம் மற்றும் அரிய-மண் தாதுக்களைப் பிரித்தெடுக்கும் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மேலும் அப்பணிகளில் ஆயிரக் கணக்கான சீனர்களைப் பணியில் அமர்த்தியுள்ளன. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு, வேலையிழப்பால் உள்ளூர் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்நிலையில், தெற்கு தஜிகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள காட்லான் மாகாணத்தில் சீனா கட்டுப்பாட்டில் இருக்கும் தங்கச் சுரங்கத்தில் நடந்த திடீர் ட்ரோன் தாக்குதலில் மூன்று சீன தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இது கடந்த 10 மாதங்களில் நடந்த இரண்டாவது எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல் ஆகும். கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட ட்ரோன், சீனா நிர்வகிக்கும் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் முகாமை தாக்கியதாக தஜகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
சித்ராலில் இருந்து பாகிஸ்தானின் ISI உளவு அமைப்பு ஏவிய ட்ரோன் ஆப்கானிஸ்தான் வான்வெளியைக் கடந்து, தஜிகிஸ்தானில் உள்ள சீன தொழிலாளர் முகாமை தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் இறந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்துள்ள ஆப்கான் அரசு, இத்தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று மறுத்துள்ளது. அத்துடன் இரு நாடுகளுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்த செய்த சதியே இந்த ட்ரோன் தாக்குதல் என்றும் கூறியுள்ளது.
மேலும், ட்ரோன் தாக்குதலுக்குப் பின்னாலிருக்கும் உண்மையைக் கண்டறிய தகவல் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு உட்பட முழு ஒத்துழைப்பை வழங்கவும் சீனா மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளுக்கு ஆப்கான் அரசு உறுதியளித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் ஒருவரை ஒருவர் நேரிடையாக குற்றம்சாட்டவில்லை என்றாலும் பாகிஸ்தான், தாலிபான்களைப் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது.
சீனர்கள் மீதான கோழைத் தனமான தாக்குதல் என்று கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும், அண்டை நாடுகளுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்குத் தலிபான்கள் ஆப்கான் மண்ணைப் பயன்படுத்த அனுமதிக்ககூடாது என்றும் தெரிவித்துள்ளது.
தஜிகிஸ்தானில் அதிகரித்து வரும் சீனாவின் முதலீடுகள், தங்களுக்குக் கடுமையான பொருளாதார சவால்களை உருவாக்கக்கூடும் என்று அஞ்சிய பாகிஸ்தான் ராணுவமும், ISIயும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் குறித்து விசாரணையை ரஷ்யா தொடங்கியுள்ளது. விரைவில் உண்மை விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















