உலகின் மிக விலையுயர்ந்த NISAR செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட 100வது நாளில், உலகை எடுத்த முதல் high-resolution படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. பூமி கண்காணிப்புக்கு அப்பால், NISAR எதிர்கால விண்வெளி ஆய்வுக்கான களத்தை அமைப்பதால் இது அறிவியலின் அடுத்த கட்ட வளர்ச்சியின் தொடக்கம் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2015ம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, இருந்த காலத்தில் இருநாடுகளும் சேர்ந்து அதிநவீன ரேடார்களுடன் உள்ள செயற்கைக்கோளை வடிவமைத்து விண்ணில் செலுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். உலகின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிக்கவும் பருவ நிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவும் இஸ்ரோ- நாசா கூட்டு முயற்சியில் நிசார் செயற்கைக் கோள் தயாரிக்கும் பணி அதே ஆண்டு ஏப்ரலில் தொடங்கியது.
நிசார் செயற்கைக்கோள் வடிவமைப்புப் பணிகள் முழுமையாக முடிய 10 ஆண்டுகளானது. 2,393 கிலோ எடை கொண்ட இந்தச் செயற்கைக்கோளை 12,500 கோடி ரூபாய் செலவில் இஸ்ரோவும், நாசாவும் இணைந்து உருவாக்கியுள்ளன. கடந்த ஜூலை மாதம் 30-ந்தேதி மாலை 5.40 மணிக்கு நிசார் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து GSLV -F 16 ராக்கெட்டில் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது.
விண்ணில் பாய்ந்த 19வது நிமிடத்தில் திட்டமிட்டப்படி பூமியிலிருந்து 740 கிலோமீட்டர் தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப் பட்டது. 12 நாட்களுக்கு ஒருமுறை பூமியை முழுமையாகச் சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் high-resolution படங்களைப் பூமிக்கு வழங்கும் வகையில் ரேடார்கள் நிசாரில் பொருத்தப் பட்டுள்ளன.
நாசாவின் எல் பேண்டு மற்றும் மற்றும் இஸ்ரோவின் எஸ் பேண்டு என்ற இரட்டை அதிர்வெண்களை பயன்படுத்தும் முதல் செயற்கைக்கோள் நிசார் ஆகும். நிசாரில் உள்ள 12 மீட்டர் REFLECTOR-யை கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்களுக்குள் மெதுவாக விரிக்கப்பட்டு, 9 மீட்டர் உயரத்தில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி தனது பணியைத் தொடங்கிய இந்தச் செயற்கைக் கோள், பூமியின் நிலம் நீர் மற்றும் பனிப் பரப்புக்களில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட துல்லியமாகப் படம் பிடிக்கத் தொடங்கியது. இந்நிலையில், நிசாரின் S-Band ரேடார், கோதாவரி நதி டெல்டாவை, அங்குள்ள சதுப்புநிலங்கள், வயல்கள், பாக்கு பயிர்கள் மற்றும் மீன்வளர்ப்பு குளங்களைத் துல்லியமாகப் படம்பிடித்து அனுப்பியுள்ளது.
குஜராத், அகமதாபாத் மற்றும் இந்தியாவின் வேறுசில இடங்களில் பட அளவுத்திருத்தத்திற்கான reflector களைப் பயன்படுத்தியும், அமேசான் மழைக்காடுகள் வழியாகப் பெறப்பட்ட விண்கலத் தரவுகளைப் பயன்படுத்தியும் துல்லியமான படங்கள் பெறப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல், நிசாரின் S-Band ரேடார் இந்திய நிலப்பரப்பு மற்றும் உலகளாவிய அளவுத்திருத்த-சரிபார்ப்பு தளங்களைத் தொடர்ந்து படம்பிடித்து வருவதாகவும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. மழை, இரவு, மேகங்கள் என எந்தக் காலநிலையையும் பூமியைத் துல்லியமாகப் படம் எடுக்கும் திறன்கொண்ட இந்தச் செயற்கைக் கோள், விவசாயம், நீர்நிலை மேலாண்மை, கடல்மட்டம் உயர்வு, பேரிடர் மேலாண்மை போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்குப் பயன்படுகிறது.
















