சிவகங்கை அருகே பேருந்து விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய மாவட்ட ஆட்சியரையும், மாவட்டப் பொறுப்பு அமைச்சரையும் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
விபத்தில் இறந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார். மேலும், பேருந்து விபத்துகள் தொடரும் நிலையில், சாலைப் பயணங்களுக்கான உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பேருந்து ஓட்டுநர்கள் மட்டுமின்றி, அனைவரும் தவறாமல் பின்பற்றி, பாதுகாப்போடு பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
தென்காசியில் நடந்த உயிரிழப்புகளின் ரணம் ஆறும் முன்பே, மீண்டுமொரு பெரும் விபத்து நடந்துள்ளது அதிர்ச்சியளிப்பாதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும், உயரிய சிகிச்சை அளிக்க, தமிழக அரசைக் கேட்டுக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.
மேலும், தொடர் பேருந்து விபத்துகளுக்கான காரணங்களை ஆராய்ந்து, அதற்கான தீர்வு நடவடிக்கைகளை, உடனடியாக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
















