உலகில் அதிகளவு ஆக்சிஜனை வெளியேற்றும் பகுதி என்ற பெருமை பெற்றிருந்த அமேசான் காடுகள், தற்போது அதிகளவில் கார்பனை வெளியேற்றி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
காற்று மாசு, உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மூல காரணமாக விளங்குவது கார்பன் டை ஆக்சைடு. வாகனங்களின் பெருக்கத்தாலும், தொழிற்சாலைகளில் இருந்து அதிகளவில் வெளியேற்றப்படும் புகையாலும், நகர்மயமாதலாலும், காடுகள் அழிக்கப்படுவதாலும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் கோடிக் கணக்கில் பணத்தை கொட்டி பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
காடுகளை காப்பது அந்தத் திட்டங்களில் முதன்மையானதாக உள்ளது. இந்தப் பின்னணியில்தான் அமேசான் காடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தக் காடுகளில் சுமார் 390 பில்லியன் மரங்கள் உள்ளதால், பெரும் அளவில் கார்பன் டை ஆக்ஸைடு கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு மரம் ஒரு ஆண்டுக்குச் சராசரியாக 25 கிலோ கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியென்றால், அமேசான் காடுகளில் உள்ள 390 பில்லியன் மரங்களும் சேர்ந்து எத்தனை லட்சம் டன் கரியமில வாயுக்களை உறிஞ்சும் என்பதை நாமே யூகித்து கொள்ளலாம். மேலும், இந்தக் காடுகள் நாள்தோறும் 20 பில்லியன் டன் நீராவியை வெளியேற்றுவதால், நீர் சுழற்சியும், வளி மண்டலத்தின் தூய்மையும் பேணப்படுகிறது.
இத்தகைய காரணங்களால் உலக வெப்பமயமாதலை தடுக்கும் இயற்கை அரணாக அமேசான் காடுகள் விளங்கி வந்தன. ஆனால், அந்த நிலைமை தற்போது தலைகீழாக மாறி வருகிறது. அமேசான் காடுகள் ஆக்சிஜனை வெளியிடுவதற்கு பதிலாக, அதிகளவில் கார்பனை வெளியிட்டு வருவதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான ஆய்வை, லெய்செஸ்டர், ஷெஃபீல்ட் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். 2017ம் ஆண்டு வரை நிலைமை சீராக இருந்ததாகவும், அதன் பிறகுதான் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழல் நீடித்தால், உலக வெப்பமயமாதல் வேகமாக அதிகரிக்க தொடங்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். மரங்கள் வெட்டப்படுதல், அதிகளவில் சுரங்கங்களை தோண்டுதல், உள்ளிட்டவை அமேசான் காடுகளின் தன்மை மாறுபட்டதற்கான காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. தேவையான நடவடிக்கைகளைத் தற்போதே எடுக்கத் தவறினால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகின் வெப்பநிலை 2.8 டிகிரி செல்கியஸ் முதல் 3.1 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2021ம் ஆண்டு காலநிலை மாற்றம் தொடர்பான உலகளவிலான மாநாடு ஸ்காட்லாந்தில் நடைபெற்றது.
அப்போது, 2030ம் ஆண்டுக்குள் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 4 ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும், திட்டத்தை செயல்படுத்த ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்தச் சூழலில் இந்தாண்டிற்கான காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. அப்போது, உலகம் முழுவதும் உள்ள வெப்பமண்டல மழை காடுகளை காக்க 125 பில்லியன் நிதி திரட்டத் திட்டமிடப்பட்டது. ஆனால், பெரும்பாலான நாடுகள் அந்தத் திட்டத்திற்கும் நிதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இப்படி, உலக நாடுகளின் அலட்சியத்தால்தான் அமேசான் போன்ற காடுகள் பாதிப்பை சந்தித்து வருவதாக, வன ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். கோடிக்கணக்கில் மரங்களை நட்டு புதிதாகக் காடுகளை உருவாக்கும் காட்டிலும், தற்போதுள்ள காடுகளை பேணி காப்பது மிகவும் அவசியம் என்பதையும் அவர்கள் சுட்டிகாட்டுகின்றனர்.
















