பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைச்சாலையில் உயிரிழந்து விட்டதாகத் தகவல் பரவி வருகிறது. இதற்குச் சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தாலும், இவ்விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான், 2018ம் ஆண்டு அந்நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து 4 ஆண்டுகள் அவர் ஆட்சி நடத்தி வந்த நிலையில், 2022ம் ஆண்டு அவர்மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
பிரதமராக இருந்தபோது அவருக்கு ஏராளமான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றை கருவூலத்தில் ஒப்படைக்காமல் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக இம்ரான் கான் மீது வழக்கு தொடரப்பட்டது. அதே நேரத்தில் அவர்மீதான மற்ற வழக்குகளின் விசாரணையும் வேகமெடுக்கவே, 2023ம் ஆண்டு இம்ரான் கானுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ராவல்பிண்டி அடியாலா சிறைச்சாலையில் 2 ஆண்டுகளாக இம்ரான் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்களும், குடும்பத்தினரும் தொடர்ச்சியாக அவரை சென்று சந்தித்து வந்தனர். ஆனால், கடந்த ஒரு மாதமாக இம்ரானை சந்திக்க யாரையும் சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
எத்தனை முயற்சித்தும் அவரை பார்க்க முடியாமல் போகவே, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்ரான் கானை சிறை நிர்வாகம் தனிமை சிறையில் அடைத்துக் கடுமையாகத் தாக்கியதாகவும், இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டதாகவும் தகவல் பரவியது.
இந்தத் தகவல், அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, இம்ரான் கானின் சகோதரிகள் சிறை வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்ரான் கானை சந்திக்க கட்டாயம் தங்களை அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இருப்பினும் அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இம்ரான் கான் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகாரமாகவே, ஒரு கட்டத்தில் அடியாலா சிறைச்சாலை மௌனம் கலைத்தது. இம்ரான் கான் உயிரோடுதான் உள்ளதாகவும், அவர் பூரண நலத்துடன் இருப்பதாகவும் விளக்கம் அளித்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜாவும், தன் தரப்பில் சில விளக்கங்களை அளித்தார்.
சிறைச்சாலையில் ப்ரீமியர் வசதிகளை இம்ரான் அனுபவித்து வருவதாகவும், நட்சத்திர ஹோட்டல்களில்கூட கிடைக்காத உணவுகள் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சிறை நிர்வாகம் தரப்பிலும், ஆளும் அரசு தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், இம்ரான் கான் விவகாரம் முடிவுக்கு வரவில்லை. அவரை நேரில் பார்த்தால் மட்டுமே நீங்கள் கூறுவதை நாங்கள் நம்புவோம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். தனது தந்தை உயிரோடுதான் உள்ளார் என்பதற்கான ஆதரங்களை வழங்க வேண்டும் என, இம்ரானின் மகன் காசிம் கானும் தற்போது வலியுறுத்தத் தொடங்கியுள்ளார்.
இதனிடையே, இம்ரான் கானின் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவான குர்ரம் சீஷான் இந்த விவகாரத்தில் மறுபட்ட தகவலைத் தெரிவிக்கிறார். இம்ரான் கான் கொலை செய்யப்படவில்லை, அவர் நலமுடன்தான் இருப்பதாகக் கூறும் அவர், இம்ரான் கானை நாட்டை விட்டு வெளியேற அழுத்தம் கொடுக்கவே அவர் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்படுகிறார்.
நாடு முழுவதும் இம்ரான் கானுக்கு பெருகி வரும் ஆதரவை கண்டு ஷெபாஸ் ஷெரீப் அரசு அச்சப்படுதால்தான், அவர் குறித்த புகைப்படங்களையோ, வீடியோக்களையே வெளியிடாமல் உள்ளதாகவும் தெரிவிக்கிறார். இப்படி, இம்ரான் கானின் உடல்நலம் குறித்து பல்வேறு மாறுபட்ட தகவல்களும், யூகங்களும் தொடர்ச்சியாக பரவியவண்ணமே உள்ளன. சிறை நிர்வாகம் அவரை காண அனுமதி அளித்தால் மட்டுமே, இந்த குழப்பங்கள் அனைத்திற்கும் ஒரு தீர்வு ஏற்படும்.
















