கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவரான ஆண்ட்ரே ரசல் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேற்கு இந்திய தீவுகள் அணி வீரரான ஆண்ட்ரே ரசல் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகக் கடந்த 2014-ம் ஆண்டு முதல் விளையாடி வந்தார். ஐபிஎல் தொடரில் இதுவரை 140 போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்ட்ரே ரசல், 2 ஆயிரத்து 651 ரன்கள் குவித்துள்ளதுடன் 123 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக ஆண்ட்ரே ரசல் அறிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் முடிவைத் தான் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், உலகம் முழுவதும் நடக்கும் பிற லீக் போட்டிகளில் மற்ற கேகேஆர் அணிகளுக்காகத் தொடர்ந்து விளையாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இன்னும் சிறிது காலம் அவர் விளையாடி இருக்கலாம் என ரசிகர்கள் எண்ணும் காலத்தில் ஓய்வு பெறுவதே, சிறப்பாக இருக்கும் எனத் தான் உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமூக வலைதளங்களில் வேறு நிற ஜெர்சிக்களில் தன்னை பார்க்கும்போது தனக்கு அது வித்தியாசமாகத் தோன்றியதாகத் தெரிவித்துள்ள ரசல், எப்போது கேகேஆர் அணியின் ஊதா மற்றும் பொன் நிறத்திலான ஜெர்சியையே தனக்குரியதாகக் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
கேகேஆர் அணி CEO வெங்கி மைசூர் மற்றும் உரிமையாளர் ஷாரூக் கான் ஆகியோருடன் கலந்து பேசி, தனது ஐபிஎல் பயணத்தின் அடுத்த அத்தியாயத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஆண்ட்ரே ரசல், தனது அனுபவங்களின் உதவியுடன் வரும் 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் ‘பவர் கோச்’ ஆகக் களமிறங்கவுள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
















