உலகின் சிறந்த ரோபோக்களை உருவாக்க சீனாவும்அமெரிக்காவும் ஒரு ரோபோ உற்பத்தி போரைத் தொடங்கியுள்ளன. நுகர்வோருக்கான வெகுஜன மற்றும் மலிவு விலை ரோபோக்களின் அளவில் சீனா முன்னணியில் உள்ளது. ஆனால் அதுவே அரசுக்கு ஆபத்தாக முடியும் என்று கூறப்படுகிறது. அதுபற்றிய ஒருசெய்தி தொகுப்பு.
2013ம் ஆண்டில் இருந்தே தொழில்துறை ரோபோக்களுக்கான சந்தையாகச் சீனா இருந்து வருகிறது. 2014ம் ஆண்டு, சீன சமூக அறிவியல் அகாடமியில் உரையாற்றிய சீன அதிபர் ஜி ஜின் பிங்க், நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க ரோபோ புரட்சியை வலியுறுத்தினார்.
2014ம் ஆண்டு முதல் 4653 மனிதனுக்கான இயந்திரம் என்ற திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் தொழிற்சாலைகளில் மனிதர்களை ரோபாக்களால் மாற்றும் திட்டத்தையும் சீன அரசு அறிவித்தது. அரசின் கொள்கையை ஒப்புக்கொண்டு சுமார் 2000க்கும் மேற்பட்ட தொழில்துறை உற்பத்தியாளர்கள் கையெழுத்திட்டனர்.
2016 ஆம் ஆண்டு 60,000க்கும் மேற்பட்ட தொழில்முறை ரோபாக்கள் இருந்தன. 2017-ல் 10000 தொழிலாளர்களுக்கு 97 ரோபோக்கள் என்பதில் இருந்து 2023 ல் 392 ரோபோக்கள் பிறகு 2024 ல் 470 ரோபோக்கள் என உயர்ந்துள்ளது. ஏற்கெனவே ஒரு மேம்பட்ட உயர் தொழில்துறை நாடாகும் நோக்கத்தில் 2030ம் ஆண்டு வரை சீனாவின் வளர்ச்சித் திட்டத்துக்கான ஆறு முக்கியமான புதிய பொருளாதார வளர்ச்சி துறைகளில் மனித ரோபாட்டிக்ஸ் துறையையும் சீனா தனது மேட் இன் சீனா 2025 கொள்கைத் திட்டத்தில் சேர்த்தது. சீனாவில் வேறு எந்த உற்பத்தித் தொழில்நுட்பத்தையும் விடத் தொழில் துறை ரோபோடிக்ஸ் அதிக முன்னுரிமையும் அதிக கவனமும் பெற்றுள்ளது.
இதற்காக ஆட்டோமொபைல்ஸ் மின்னணுவியல் மற்றும் மருத்துவத் துறையில் தொழில்துறை ரோபோக்களை ஏற்றுக் கொள்வதற்கு அரசு மானியம் வழங்கப்படுகிறது. சுமார் 150க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் ரோபோக்களை உற்பத்தி செய்து அமெரிக்க ரோபோ நிறுவனங்களுடன் போட்டி போடுகின்றன. கடந்த ஆண்டு உலகில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களில் கிட்டத்தட்ட ஐந்தில் மூன்றில் பங்கு சீனாவினுடையதாகும்.
கடந்த ஆண்டு சீனத் தொழிற்சாலைகளில் கிட்டத்தட்ட 3,00,000 புதிய ரோபோக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, அமெரிக்கா வெறும் 34,000 ரோபோக்களை மட்டுமே சேர்த்துள்ளது. இதன் மூலம், ரோபோ உற்பத்தி சந்தையில் சீனா, ஜப்பானை விஞ்சி, உலகப் பங்கில் மூன்றில் ஒரு பங்கை எட்டியுள்ளது. சீனாவின் ரோபோ உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளின் விலை கிட்டத்தட்ட 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
முன்னணி ரோபோ நிறுவனமான UBTech Robotics பங்கின் விலை 4 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம், சமையல் முதல் சாகசம் வரை என, உலகிலேயே மிகக் குறைந்தவிலையில் R1 என்ற மனித உருவ ரோபோவை சந்தைப் படுத்தியுள்ளது. சுமார் 25 கிலோ எடையும், 4 அடி உயரமும் கொண்ட இந்த R1 ரோபோ, சிக்கலான பணிகளையும் கையாளும் மல்டிமோடல் மாடல் (Large Multimodal Model) வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் விலை 5,900 டாலராகும். அதாவது இந்தியாவின் MG Comet EV காரை விடவும் குறைவான விலையாகும். சீனாவின் ரோபோக்கள், கார் பாகங்களை பற்றவைப்பது முதல் இராணுவத் தளவாடங்களை நிர்வகிப்பது வரை பல்வேறு பணிகளைச் செய்கின்றன. மேலும், AI உடன் ஒருங்கிணைக்கப்பட்ட ரோபோக்கள் செயல்திறனை மேம்படுத்துகின்றன. சீன ராணுவத்தில் ஏற்கெனவே ரோபோ நாய்கள் சேர்க்கப்பட்டு உள்ள நிலையில் ரோபோ வீரர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இது தொடர்பாகச் சீனாவின் யுபி டெக் ரோபோடிக்ஸ் நிறுவனத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே 330 கோடி ரூபாய் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.இந்த ஆண்டு இறுதிக்குள் மனித வடிவிலான 500 ரோபோக்கள் சீன ராணுவத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன. இந்த ரோபோ வீரர்களை வியட்நாம் எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்த சீனா திட்டமிட்டுள்ளது. படிப்படியாக எல்லைப் பகுதிகள் முழுவதும் ரோபோ வீரர்களை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் நாட்டின் மனித ரோபாட்டிக்ஸ் துறையில் ஒரு குமிழி உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. மேலும் அதிகமான அளவில் மனித ரோபோக்களின் வளர்ச்சி, சிறந்த தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளைத் தடுப்பதால் அவற்றைக் கட்டுப் படுத்துவது முக்கியம் என்று சீன வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
















