நாட்டிலேயே முதல் முறையாக 16 தளங்களுடன் கூடிய ரயில் நிலையம், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டு வருகிறது. 2027-ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் இந்த ரயில் நிலையத்தில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறுகின்றன. விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
எந்தவொரு மாநிலத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றாலும், குஜராத் மாடலை தவிர்த்து விட்டு வேறு எதையும் சிந்தித்து கூடப் பார்க்க முடியாது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை அகற்றி விட்டு, பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி மகுடம் சூடியதற்கு, இந்தக் குஜராத் மாடலே முதல் படி என்று கூறலாம். அந்த அளவுக்கு ஒட்டுமொத்த தேசத்திற்கும் முன்னுதாரணமாகத் திகழும் குஜராத் மாடலில், மேலும் ஒரு பிரமிக்க வைக்கும் கட்டமைப்பு, ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அது என்னவென்றால், அகமதாபாத்தில் 16 தளங்களுடன் கட்டப்பட்டு வரும் அதிநவீன ரயில் நிலையம் தான். மிகப்பெரிய ரயில் நிலையம் என்றாலே 12,13 பிளாட்பார்ம்கள் இருப்பதை கேள்விப்பட்டிருப்போம். அதென்ன 16 தளங்கள் என்பது வியப்பை கூட்டுகிறதல்லவா? … ஆம், அப்படியொரு சிறப்பம்சம் தான் அகமதாபாத் ரயில் நிலையத்தில் இடம்பெறுகிறது. எதற்காக இந்த ஏற்பாடு என்றால்? அகமதாபாத் ரயில் நிலையம், எக்ஸ்பிரஸ் ரயில்கள், புறநகர் பகுதிகளை மட்டும் கையாளப்போவதில்லை… மெட்ரோ ரயில்களையும், பேருந்துகளையும் இங்கிருந்து இயக்கக்கூடிய வகையில் கட்டடம் வடிவமைக்கப்படுகிறது.
இது மட்டுமல்ல… பிரம்மாண்ட பார்க்கிங் வசதி, அதிநவீன வசதியுடன் கூடிய காத்திருப்பு அறை, வணிக வளாகங்கள் எனப் பயணிகளுக்கு விருந்து காத்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாகக் கவனிக்கத் தக்க விஷயம் என்னவென்றால், புல்லட் ரயில் சேவைக்கும் இது உகந்ததாக வடிவமைக்கப்படுவதே. ஜப்பான் உதவியுடன் மும்பை – அகமதாபாத் இடையே 508 கிலோ மீட்டர் தொலைவிற்கு புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்படும் நிலையில், ரயில் பயணிகளுக்கு இப்போதே எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அகமதாபாத் ரயில் நிலையத்தின் வடிவமைப்பே அர்த்தமுள்ளதாகவும், ஆச்சரியமூட்டுவதாகவும் இருக்கிறது.
அகமதாபாத் பட்டத் திருவிழா, சர்வதேச அளவில் புகழ்பெற்றதாக இருக்கும் நிலையில், அதனைப் பிரதிபலிக்கும் வகையில் ரயில் நிலையத்தின் வெளிபுறத் தோற்றம் அமைக்கப்படுகிறது. கட்டடத்தின் மேற்புறம் ஏராளமான காத்தாடிகளை அடுக்கி வைத்தது போல் வடிவமைக்கப்படுவது, பயணிகளை நிச்சயம் அசர வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
2027-ம் ஆண்டில் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் அகமதாபாத் ரயில் நிலையம், ரயில், மெட்ரோ, பேருந்து போக்குவரத்துகளை ஒரே இடத்தில் இணைப்பதால், பயணிகளின் அலைச்சல் குறையும். குஜராத் மாநிலத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் பொருளாதாரத்திற்கும், 16 தளங்களுடன் கூடிய அகமதாபாத் ரயில் நிலையம் கைகொடுக்கும் என்பதால், எந்தத் தேதியில் திறப்பு விழா நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே கிளம்பியுள்ளது.
















