தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே காலந்தொட்டு இருக்கும் நீண்ட நெடிய தொடர்பைப் புதுப்பிக்கும் வகையில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் வாரணாசியில் வெகுவிமரிசையாகத் தொடங்கியிருக்கிறது. தமிழ் கற்கலாம் எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் நடப்பாண்டு நிகழ்வின் மூலமாக வாரணாசியைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டும், தமிழக ஆசிரியர்கள் வாரணாசிக்கு அழைத்துச் செல்லப்பட்டும் தமிழை கற்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டிற்கும் உத்திரப்பிரதேசத்தின் காசிக்கும் இடையிலான ஆழமான நாகரீக பிணைப்புகளைக் கொண்டாடும் காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்வு வாரணாசியில் வெகுவிமரிசையாக நடப்பாண்டில் தொடங்கியிருக்கிறது. ஆண்டுதோறும் ஒவ்வொரு கருப்பொருளுடன் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வு நடப்பாண்டு தமிழ் கற்கலாம் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகிறது.
தமிழ் மொழியை நேசிக்கும் அனைவருக்கும் மையப்புள்ளியாக நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வு, தமிழ் மொழியின் பெருமையைப் பாரத நாட்டின் மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களும் அறிந்து கொள்ள ஏதுவாகத் தமிழை கற்கலாம் என்ற கருப்பொருள் மையப்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும் சென்னை ஐ.ஐ.டியும் இணைந்து நடத்தும் இவ்விழாவில் பங்கேற்க தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ள நபர்கள், வாரணாசி, பிரயாக்ராஜ், மற்றும் அயோத்தியை சென்று பார்வையிடுவதோடு, பாரதியார் இல்லம், காசி மடம், காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இரண்டு கட்டங்களாக நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 7 குழுக்கள் காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள பெருமையையும், தமிழகத்துடனான தொடர்பையும் அறிந்து கொள்வதுடன், ஆன்மீக அனுபவத்தையும் பெற உள்ளனர்.
இரண்டாம் கட்டமாகத் தமிழ்நாட்டில் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிவரை நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் வாரணாசியில் இருந்து 300 மாணவர்கள் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட உள்ளனர். தமிழ் பண்பாடு, புராதன கலாச்சாரம், நாகரீக தொடர்பு ஆகியவற்றை அறிந்து கொள்வதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று தமிழ் மொழியை அவர்கள் முறையாகக் கற்கவும் உள்ளனர்.
தமிழகத்திலிருந்து 50 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உத்திரப்பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள 50 பள்ளிகளில் சுமார் 1500 மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுத் தமிழை கற்றுத்தர உள்ளனர். தமிழகத்திற்கும் காசிக்கும் இடையிலான பாரம்பரிய உறவை புதுப்பிக்கும் வகையிலான இம்முயற்சி நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், கைவினை கலைஞர்கள் எனப் பல நூறு பேரை மத்திய அரசு தன் சொந்த செலவில் அழைத்துச் செல்வதோடு, அங்குள்ள பல்வேறு பழமையான இடங்களை பார்வையிட வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
பிரதமர் மோடி தான் பங்கேற்கும் நிகழ்வுகள் அனைத்திலும் தமிழ் மொழி குறித்தும், கலாச்சாரம் பண்பாடு பற்றியும் உயர்வாகப் பேசுவதோடு, அதனைப் பெருமைபடுத்தக்கூடிய இது போன்ற நிகழ்வுகளையும் ஆண்டுதவறாமல் நடத்திவருவது தமிழ் மீதான அவரின் உண்மையான பற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கலாச்சார பரிமாற்றம், மொழியியல் செறிவூட்டல் மற்றும் அறிவுப் பகிர்வின் மூலம் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்வும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. உத்திரப்பிரதேசத்தில் தமிழ் மணம் பரப்புவதற்கான வாசலை இந்த காசி தமிழ் சங்கமம் திறந்து வைத்திருக்கிறது.
















