இந்தியாவுக்கு வரும் ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடியைச் சந்திக்கும்போது S -500 வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. S-400 மற்றும் S -500 இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடமிருந்தும் இந்தியாவிற்கு புதிய அச்சுறுத்தல்கள் உருவாகி வருகின்றன. போதாக்குறைக்கு வங்கதேசமும் இவர்களுடன் கைக்கோர்த்துக் கொண்டு, இந்தியாவுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு வலு சேர்க்கும் வகையில் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக ரஷ்யாவின் S -500 வான்பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட ஆயுத தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா மும்முரம் காட்டிவருகிறது. S-400 அதிகபட்சமாகச் சுமார் 400 கிலோமீட்டர் வரை இடைமறிக்கும் வரம்பையும், 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அச்சுறுத்தல்களைக் கண்டறியும் திறனையும் கொண்டுள்ளது. அதே நேரத்தில் S-500 அதிகபட்சமாக 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வான் இலக்குகளையும், 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் தாக்கி அழிக்கும் ஆற்றலையும் 2,000 கிமீ தொலைவில் உள்ள அச்சுறுத்தல்களையும் கண்டறியும் திறனையும் கொண்டுள்ளது.
30 கிலோமீட்டர் உயரம் வரையிலான அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்துவதில் S-400 திறம்பட செயல்படுகிறது. அதே சமயத்தில் 200 கிலோமீட்டர் உயரம் வரையிலான இடைமறிப்பு திறன்களுடன் S-500 வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பூமியின் கீழ் சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள் மற்றும் உயர்-பாதை பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் எதிர்கொண்டு இடைமறித்து அழிக்கும் திறனை S-500 கொண்டுள்ளது.
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் விண்வெளி சுற்றுப் பாதையில் இருந்து வரும் தாக்குதல்களை இடைமறிப்பதற்காக S-400 வடிவமைக்கப்படவில்லை. அதாவது வளிமண்டலத்தின் உட்புற இலக்குகளை அதுவும் ஒலியை விட 14 மடங்கு வேகத்தில் வரும் அச்சுறுத்தல்களையே S-400 இடைமறித்துத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும். ஆனால், ஒலியின் வேகத்தை விட இருபது மடங்கு அதிகமான வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும், விண்ணிலிருந்து வரும் ஏவுகணைகளையும் விண்வெளி தளங்களையும் தாக்கி அழிக்கும் வகையில் S-500 கட்டமைக்கப்பட்டுள்ளது.
40N6, 48N6, 9M96E, மற்றும் 9M96E2 ஆகிய நான்கு வகையான ஏவுகணைகளை S-400 பயன்படுத்துகிறது என்றால், மேம்படுத்தப்பட்ட தடுப்பு ஏவுகணைகளை S-500 பயன்படுத்துகிறது. வெளிப்புற-வளிமண்டல இடைமறிப்பு திறன்கொண்ட 40N6M ஏவுகணைகளைப் பயன்படுத்தி பூமியிலிருந்து 100 கிலோமீட்டருக்கு மேல் விண்வெளி தொடங்கும் இடத்திலிருந்து வரும் போர் விமானங்களையும் ஜெட் ட்ரோன்களையும் S-500 சுட்டு வீழ்த்தும்.
மேலும், உள்வரும் அச்சுறுத்தல்களை அதிவேகத்தில் நேரடியாக மோதி அழிக்கும் HIT-TO -KILL ஆற்றலைக் கொண்டுள்ள 77N6-N மற்றும் 77N6-N1 தடுப்பு ஏவுகணைகளை S -500 பயன்படுத்துகிறது. காலியம் நைட்ரைடு (GaN) தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்ட புதிய தலைமுறை ரேடார்கள் S-400யை விட நீண்ட தூரம், விரைவான கண்காணிப்பு மற்றும் மிகச் சிறந்த தாக்குதல் திறனைக் கொண்டுள்ளது.
மேலும், 12 லாஞ்சர்கள், கட்டளை அமைப்புகள் மற்றும் மூன்று உயர் செயல்திறன் ரேடார்களும், S-500 வான் பாதுகாப்பு அமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 80 இலக்குகளைக் கண்காணித்து 36 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் திறன் கொண்ட S -400, 10 வினாடிகளில் தாக்குதல் நடத்தும் என்றால் S-500 நான்கு வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில், 10 இலக்குகளை ஹைப்பர்சோனிக் வேகத்தில் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாகும்.
ஏற்கெனவே S -400-யை இந்தியா, சீனா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் வாங்கியுள்ள நிலையில், ரஷ்யாவின் மேம்பட்ட S -500யை கொள்முதல் செய்யும் முதல் நாடாக இந்தியா உள்ளது. அதிக விலை என்றாலும் S -500 எதிர்காலப் பாதுகாப்புக்கான சிறந்த முதலீடாக கருதப்படுகிறது.
















