பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஏ.வி.எம். சரவணன், சிறிது காலமாக வயது மூப்பினால் ஏற்படும் உடல்நல பிரச்னைக்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலை 5.30 மணியளவில் ஏ.வி.எம்.சரவணன் காலமானார்.
அவரது உடல் ஏவிஎம் ஸ்டியோவில் உள்ள 3வது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏவிஎம் சரவணனின் உடலுக்குத் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருதை ஏவிஎம் சரவணன் பெற்றுள்ளார். ஏவி மெய்யப்ப செட்டியாருக்குப் பின்னர், அவரது மகனான ஏவிஎம் சரவணன் அந்த நிறுவனத்தை நிர்வகித்து வந்தார்.
நானும் ஒரு பெண், சம்சாரம் அது மின்சாரம், சிவாஜி, வேட்டைக்காரன், மின்சார கனவு, அயன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை ஏவிஎம் சரவணன் தயாரித்துள்ளார். ஏ.வி.எம். சரவணனின் உயிரிழப்பு திரைப்படத் துறையினரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த படங்கள் ஏவிஎம் தயாரிப்பில் தான் வந்துள்ளதென மறைந்த ஏவிஎம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் நடிகர் சிவகுமார் புகழாரம் சூட்டினார். தனது வாழ்க்கையை மாற்றியமைத்தவர் ஏவிஎம் சரவணன் எனக் கூறிய அவர், 73 வருடங்களில் 175 படங்களை ஏவிஎம் நிறுவனம் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
மிகச் சிறந்த பண்பாளர் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் ஏவிஎம் சரவணன் என இயக்குனர் வசந்த் தெரிவித்தார். ஏவிஎம் சரவணன் தயாரிப்பில் படம் இயக்கியது இல்லை எனக் கூறிய அவர், தேசிய விருது வாங்கும் போதெல்லாம் தன்னை தொடர்புகொண்டு பாராட்டுவார் என்பதையும் நினைவு கூர்ந்தார்.
ஏவிஎம் சரவணன் மிக அற்புதமான மனிதர் என இயக்குனர் வாசு தெரிவித்தார். அவரது மரணம் குறித்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை என கூறிய இயக்குனர் வாசு, சரவணனின் குடும்பத்திற்கு தனது ஆறுதல் தெரிவித்தார்.
இயக்குநர்கள் பலருக்கு ஏவிஎம் ஸ்டுடியோ வாழ்க்கை கொடுத்ததாக நடிகர் விஷால் தெரிவித்தார். பல முக்கிய நடிகர்களை ஏவிஎம் ஸ்டுடியோ அறிமுகப்படுத்தியதாகக் கூறிய அவர், தயாரிப்புப் பணிகளை ஏவிஎம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தமிழ் திரையுலகம் தற்போது வரை இருப்பதற்கு ஏவிஎம் தான் காரணம் என நடிகர் விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார். ஏவிஎம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்கள் குடும்பத்தில் ஒருவரை போல ஏவிஎம் சரவணன் பழகியதாகக் கூறினார். சரவணன் அவர்களுக்குப் பல கனவுகள் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
















