பாமக விவகாரத்தில் பிரச்னை நீடித்தால் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு இருந்துவரும் சூழலில், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அன்புமணி கட்சியை அபகரித்துவிட்டதாக ராமதாஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி மினி புஷ்கர்ணா அமர்வில் வழக்கானது விசாரணைக்கு வந்த நிலையில், இருதரப்பினர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அன்புமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் போலியானவை என்றும், ராமதாஸ் தான் பாமக கட்சியின் நிறுவனர் எனவும் ராமதாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
அதேபோல, கட்சியின் தலைவராகத் தன்னை பாமக அங்கீகரித்துள்ளதாக அன்புமணி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது, கட்சியின் தலைவர் விவகாரத்தில் எந்தத் தனிப்பட்ட முடிவையும் தாங்கள் எடுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இருதரப்புக்கும் பிரச்னை நீடித்தால் கட்சியின் சின்னம் யாருக்குமின்றி முடக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது எனத் தெரிவித்தனர்.
மேலும், பாமக வழக்கில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு ராமதாஸ் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















