கர்நாடகாவில் குக்கே சுப்ரமணியர் கோயில் நீரு பண்டி உற்சவத்தின்போது பக்தர்களை தடுத்த ஊழியரை கோயில் யானை கீழே தள்ளிவிட்ட வீடியோ வைரலாகி உள்ளது.
சர்ப்ப தோஷம் மற்றும் சரும நோய்களை நீக்கும், புகழ்பெற்ற குக்கே சுப்ரமணியசுவாமி கோயில், கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவில் இயற்கை எழில் சூழ்ந்த மலைகளுக்கு நடுவில் குமாரதாரா நதிக்கு அருகில் அமைந்துள்ளது.
5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் நீரு பண்டி உத்சவ என்ற திருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த உத்வசத்தின்போது கோயில் யானை மீது பக்தர்கள் தண்ணீர் தெளித்து கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் கோயில் யானை யஷஸ்வினி மீது தண்ணீரை தெளிக்க பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது ஊழியர் ஒருவர் பக்தர்களை ஒழுங்கு படுத்தி கொண்டிருந்தார்.
பக்தர்களை தடுக்கும் வகையில் நின்றிருந்த ஊழியரை யானை தனது துதிக்கையை கொண்டு கீழே தள்ளியது.
இதனால் அங்கிருந்தவர்கள் சற்று அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பக்தர்கள் தண்ணீர் தெளிக்க கோயில் யானை உற்சாகமாக நீரில் விளையாடியது இணையத்தில் வைரலாகி உள்ளது.
















