பாபர் மசூதியை மீண்டும் கட்டுவேன் என்று அறிவித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹூமாயுன் கபீரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து அக்கட்சி உத்தரவிட்டது.
அயோத்தியில் இருந்த பாபர் மசூதியைப் போன்று, மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் மசூதியை கட்டுவேன் என்று தெப்ரா தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹூமாயுன் கபீர் அறிவித்திருந்தார்.
மேலும், இதற்காக டிசம்பர் 6ம் தேதி அடிக்கல் நாட்டுவேன் என்றும், 3 மாதங்களுக்குள் கட்டி முடிப்பேன் எனவும் கூறியிருந்தார். அவரது இப்பேச்சு மேற்குவங்கத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏவின் இந்த அறிவிப்புச் சட்டம் ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தும் என்று ஆளுநர் சிவி ஆனந்த போஸூம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியதாக ஹூமாயுன் கபீரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே திரிணாமூல் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ கபீர், டிசம்பர் 22ம் தேதி புதிய கட்சியைத் தொடங்க இருப்பதாகவும், 2026 சட்டசபைத் தேர்தலில் 135 தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
















