இந்து மக்களின் உணர்வுகளிலும் வழிபாட்டு உரிமையிலும் வீண் வம்போடு திமுக தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திமுக அரசு பதிந்த மேல்முறையீட்டு மனுவைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து நீதியை நிலைநாட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
திமுக அரசு கடமையைச் செய்யத் தவறியதைச் சுட்டிக்காட்டியதோடு, ஏதோ ஒரு உள்நோக்கத்துடனேயே வழக்கைத் தொடர்ந்துள்ளது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தமிழர்களின் பண்பாட்டு உரிமையைப் பறிப்பதற்காகவே திமுக அரசு வழக்கு பதிந்துள்ளதை உறுதி செய்கிறது.
இன்று உயர்நீதிமன்றக் கிளையிடம் பெற்ற சவுக்கடி தீர்ப்புக்குப் பிறகாவது தனது இந்து மத வெறுப்புணர்வை திமுக அரசு மூட்டை கட்டி வைக்க வேண்டும்.
ஆட்சிக் கட்டிலில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் கிளம்ப வேண்டிய இறுதி கட்டத் தருணத்திலாவது இந்து மக்களின் உணர்வுகளிலும் வழிபாட்டு உரிமையிலும் வீண் வம்போடு தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
















