பொருளாதார நெருக்கடியில் தள்ளாடி வரும் பாகிஸ்தான் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கட்டுப்பாடற்ற அளவிலான மக்கள்தொகை பெருக்கம் தேசிய பேரழிவு என்றும் விமர்சித்துள்ளனர்.
பாகிஸ்தானின் வளம், பொருளாதாரம், மக்கள் தொகை போன்றவை குறித்து, பாகிஸ்தான் மக்கள்தொகை உச்சிமாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநாட்டில் பேசிய நிபுணர்கள், பாகிஸ்தான் மக்கள் தொகை பேரழிவின் விளிம்பில் உள்ளதாக எச்சரிக்கை மணி அடித்தனர்.
நாடு முழுவதும் கட்டுப்பாடற்ற அளவில் பெருகிவரும் மக்கள் தொகை வளர்ச்சி, நாட்டில் கிடைக்கக்கூடிய வளங்களை கபளீகரம் செய்யும் வகையில் வேகமாக அதிகரித்து வருவதாக ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தனர். மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில், அவசர தேசிய கவனம் தேவை என்பதை எடுத்துரைத்த அவர்கள், இதனை “இருத்தலியல் நெருக்கடி” என்றும் விவரித்தனர்.
மக்கள்தொகை பெருக்கமானது சுகாதார அமைப்பு, உணவு மற்றும் நீர் பாதுகாப்பு, தொழிலாளர் சந்தை, கல்வி உள்கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த நகர்ப்புற நிலைத்தன்மையை அச்சுறுத்துவதாகவும் நிபுணர்கள் கூறினர்.
தீர்க்கமான நடவடிக்கை இல்லை என்றால், பாகிஸ்தானின் வளர்ச்சிக்கான முயற்சிகள் பலனற்றதாகிவிடும் என்றும் எச்சரித்தனர். மேலும் மக்கள்தொகை அதிகரிப்பு, சுகாதார சேவைகளை பாதிப்பதோடு, அரசியலமைப்பு வழங்கும் உரிமையையும் பறித்துவிடும் என்று கூறினர். விரிவான சீர்திருத்தங்களைத் தொடர ஒரு நாடாளுமன்றக் குழு, மக்கள்தொகை கட்டுப்பாடுகுறித்து தேசிய அளவில் தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் உச்சிமாநாட்டில் முன்மொழியப்பட்டது.
“மதம் குடும்பக் கட்டுப்பாட்டைத் தடுக்காது” என்பதும் உச்சிமாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது. தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் மேற்கோள் காட்டியபடி இஸ்லாமிய கொள்கைகளுக்குள் பிறப்பு இடைவெளியை ஆதரிக்கும் நிபுணர்கள், மக்கள்தொகை மேலாண்மையை “கூட்டு தார்மீகக் கடமை” என்றும் கூறினர்.
அதே நேரத்தில் இஸ்லாம் வறுமை பயத்தை விட, சுகாதார காரணங்களுக்காகப் பிறப்பு இடைவெளியை ஆதரிப்பதாகவும், முடிவெடுக்கும் பதவிகளில் பெண்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்றும் மாநாட்டில் அழைப்பு விடுக்கப்பட்டது.
பாகிஸ்தானின் மக்கள்தொகை சவாலை நிர்வகிப்பதில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதும், கல்வியும் மையமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் பேராபத்தான மக்கள்தொகையை கட்டுப்படுத்தியே தீர வேண்டும் என்பதுதான் நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது.
















