திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், 144 தடை உத்தரவை நீக்கியும் உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பை காவல்துறையும், தமிழக அரசும் பின்பற்றாததால் பதற்றமான சூழல் நிலவியது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபமேற்றவும், 144 தடை உத்தரவை நீக்கியும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி என்.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் திரண்ட பாஜகவினரையும் பக்தர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டிய காவல்துறையினர், தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாகக் தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், காவல்துறை உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும், மேலிடத்தில் இருந்து அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், காவல்துறை அனுமதிக்கவில்லை. மாறாக 144 தடை உத்தரவை மீறியதாகக் கூறி அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், கார்த்திகை தீப விவகாரத்தில் 144 தடை உத்தரவை நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துவிட்ட நிலையில், திமுக அரசின் தொடர்ச்சியான தடை என்பது சட்ட அதிகாரத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல் என்று சாடியுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு மேலும் பிடிவாதம் பிடிக்காமல் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்த நிலையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
















