திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பேட்டி கொடுக்கும்போது நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் நடந்து கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோயில் தரப்பில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், வழக்கில் புதிதாக இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்றும், டெல்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளதால் வழக்கு விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை அவசரப்படுத்த வேண்டாம், காத்திருங்கள் என நீதிபதிகள் அப்போது தெரிவித்தனர். ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பேட்டி கொடுக்கும்போது நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும், கோயில் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















