ரயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் 5 லட்சத்து 8 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதிலில், 2014-15 முதல் 2024-2025 வரையிலான 10 ஆண்டுகளில் ரயில்வே துறை 5.08 லட்சம் பேர்களை பணியில் அமர்த்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இது முந்தைய 2004-05 முதல் 2013-14 வரையிலான காலகட்டத்தில் 4.11 லட்சமாக இருந்தது என்றும் இது 23.6 சதவிகிதம் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உதவி லோகோ பைலட்டுகள், தொழில் நுட்ப வல்லுநர்கள், ரயில்வே பாதுகாப்பு பிரிவில் சப் -இன்ஸ் பெக்டர்கள், போலீசார் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் ஆட்கள் நிரப்பப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறை நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றி பல்வேறு சவால்களையும் சமாளித்து ஆட்கள் தேர்வை நடத்தி முடித்துள்ளதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.
















