தமிழகத்தில் மாநில அரசின் தாமதம் காரணமாகப் பல முக்கிய ரயில்வே திட்டங்கள் முடங்கியுள்ளதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே திட்டங்களுக்காகக் கடந்தாண்டு 6 ஆயிரத்து 626 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில் நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசு தாமதித்து வருவதாகக் கூறியுள்ளார்.
திண்டிவனம் – திருவண்ணாமலை, மொரப்பூர் – தருமபுரி, மன்னார்குடி – பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை மற்றும் அத்திப்பட்டி – புத்தூர் போன்ற ரயில்வே திட்டங்களுக்கு 905 ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறது.
ஆனால் மாநில அரசு வெறும் 78 ஹெக்டர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது. இது வெறும் 9 சதவிகிதம் மட்டும்தானெனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் பல ரயில்வே திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறிய அஸ்வினி வைஷ்ணவ், இதற்காக 4 ஆயிரத்து 326 ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறது எனச் சுட்டிக்காட்டினார்.
ஆனால், வெறும் ஆயிரத்து 52 ஹெக்டர் நிலம் கையப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நிலம் கையப்படுத்துவதில் மாநில அரசின் பங்கு குறைவாக இருந்தபோதும் முக்கிய திட்டப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
















