இதுவரை யாராலும் ஏறப்படாத அருணாச்சல பிரதேசத்தின் காங்டோ மலை உச்சியில் ஏறி இந்திய ராணுவத்தினர் சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
இந்தியாவில் மிக உயரமான மலை, எவரெஸ்ட். சுமார் 9 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள இந்த மலையில் ஏறுவது மிகவும் கடினமான காரியமாகக் கருதப்படுகிறது. இருந்தபோதும் எவரெஸ்ட் மலையில் இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏறியுள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 900 பேர் வரை ஏறுவதற்கு முயற்சி செய்தும் வருகின்றனர். மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்திலேயே இத்தனை பேர் ஏறிவிட்டபோதிலும், இந்தியாவில் உள்ள சில மலைத்தொடர்கள் அனைத்து மலையேற்ற வீரர்களுக்கும் சிம்மசொப்பனமாக இருந்து வருகின்றன.
அவற்றில் மிக முக்கியமானது, காங்டோ மலை. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்தக் காங்டோ, அம்மாநிலத்தின் மிக உயரமான மலையாக விளங்குகிறது. கிழக்கு இமயமலைத்தொடரில், திபெத்தின் கொனா பகுதிக்கு அருகே இம்மலை அமைந்துள்ளது. இதன் காரணமாகக் காங்டோ மலையை, தென் திபெத்தின் ஒரு பகுதியாகச் சீன உரிமை கொண்டாடி வருகிறது. இதனால், இந்த மலை மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது.
அத்துடன், பாக்ட் (Bact), பேக் (Bag), பச்சுக் (Pachuk) போன்ற நதிகளின் பிறப்பிடமாகவும் இந்த மலை திகழ்கிறது. எவரெஸ்டை விடச் சுமார் ஆயிரத்து 700 மீட்டர் உயரம் குறைவாக இருந்தாலும், கடுமையான சூழல் காரணமாக இந்த மலையில் இதுவரை மனிதர்கள் யாரும் ஏறியதாக வரலாறு இல்லை. ஆனால், அந்த வரலாற்றை இந்திய ராணுவ வீரர்கள் தற்போது மாற்றி அமைத்துள்ளனர்.
கடுமையான நிலப்பரப்பு மற்றும் தட்பவெப்பநிலைக்கு மத்தியில் கிழக்கு இமய மலைப்பகுதியில் கஜ்ராஜ் என்ற படைப்பிரிவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த பிரிவை சேர்ந்த 18 வீரர்கள், காங்டோ மலைஉச்சியை சென்றடைவது என்று முடிவெடுத்தனர். நவம்பர் 3ம் தேதி அவர்களின் மலையேற்ற பயணத்தை கஜ்ராஜ் படைப்பிரிவின் மூத்த அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதிகப்படியான குளிர், ஆக்சிஜன் தட்டுப்பாடு, செங்குத்தான பனிப்பறைகள், கரடுமுரடான பாதை உள்ளிட்ட காரணங்களால்தான் காங்டோ பகுதியில் ஏற மலையேற்ற வீரர்கள் தயங்கி வந்தனர்.
அந்த மலைப்பகுதியில் சிறிய தவறு செய்தாலும் அது உயிரிழப்பிற்கு வித்திட்டு விடும். ஆனால், இந்த அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள இந்திய ராணுவ வீரர்கள் பல மாதங்களாக முறையாகப் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். உயரமான சிகரங்களில் ஏறும்போது ams எனப்படும் மலையேற்ற நோய் ஏற்படுவது வழக்கம். தலைவலி, குமட்டல், தலைசுற்றல் தொடங்கி நுரையீரல் பாதிப்புவரை நோய்கள் ஏற்படலாம்.
இவற்றையும் சமாளித்து சுமார் ஒரு மாதம் பயணம் மேற்கொண்ட வீரர்கள், கடைசியாகக் காங்டோ மலை உச்சியை அடைந்தனர். பின்னர் தரையிறங்கிய அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கிழக்குப் பகுதியின் ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.சி.திவாரி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய ராணுவ வீரர்களின் மன உறுதி, ஒழுக்கம், குழுவாகச் சேர்ந்து செயல்படும் திறன் உள்ளிட்டவையால் இந்த மகத்தான சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் புகழாரம் சூட்டினார். இந்திய வீரர்களின் முயற்சியால், இதுவரை வெற்றிக்கொள்ளப்படாத மலை என அழைக்கப்பட்டு வந்த காங்டோ மலை தற்போது வெற்றிகொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை எந்தக் கொடியும் பறக்காத அதன் உச்சியில், தற்போது மூவர்ணக்கொடியும் பறந்து வருகிறது.
















