அமெரிக்கா அதிக வரி விதித்துள்ள போதிலும், பிற நாடுகளுக்கான நாட்டின் கடல் உணவு ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தரம் மற்றும் நியாயமான விலை காரணமாக, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் இந்தியா பக்கம் திரும்பியுள்ளனர்.
மொத்த உலக மீன் மற்றும் கடல் உணவு உற்பத்தியில் 8 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராக உள்ளது. நாட்டின் முதன்மையான கடல் உணவு ஏற்றுமதியில் இறால் முதன்மையாக உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்த உடனேயே இந்தியாவின் கடல் உணவு மற்றும் மீன் உற்பத்தி துறைகடுமையாகப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிபர் ட்ரம்ப்பின் வரி விதிப்பால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரிந்துள்ள போதும், கடந்த ஏப்ரல் – அக்டோபர் மாதங்களுக்கு இடையே நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி 16.18 சதவீதம் அதிகரித்து 42,856 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த கடல் உணவு ஏற்றுமதி 40 சதவீதமும் இறால்களின் ஏற்றுமதி 57 சதவீதமும் அதிகரித்துள்ளது. மொத்த ஏற்றுமதியில் 27,280 கோடி ரூபாயுடன் இறால் முக்கிய பங்கு வைத்துள்ளது.
கடந்த ஆண்டு, இதே காலத்தில் இது 23,232 கோடி ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த வளர்ச்சிக்குக் காரணம், ஐரோப்பிய ஒன்றியம் 102 மீன்வள அலகுகளையும், 29 இந்திய மீன்வள அலகுகளை ரஷ்யா இறக்குமதி செய்ததும் தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, சீனா ரஷ்யா, வியட்நாம், பெல்ஜியம், ஜப்பான், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
வரிவிதிப்புக்கு முன்னதாகவே தென் அமெரிக்க நாடுகளான பெரு, சிலி; ஐரோப்பிய ஒன்றியம்; மற்றும் யூரேசிய பொருளாதார ஒன்றியம் (EEU) ஆகியவற்றுடன் இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.
கூடுதலாக, கடல் உணவு ஏற்றுமதிக்காக இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடன் (EFTA) இந்தியா ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தது. அதே நேரத்தில், ரஷ்யாவுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராயவும், சீனாவுடனான உறவை மேம்படுத்தவும் இந்தியா தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தது.
இந்திய கடல் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் நியாயமான விலை காரணமாக, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் இந்தியா பக்கம் திரும்பியுள்ளனர்.
















