காஞ்சிமடம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செய்யப்பட்ட காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் தங்கத்தேரை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஒப்படைத்தார்.
உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் தங்கத்தேர் செய்யும் பணியானது 12 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சங்கர மடம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் தங்கத்தேர் செய்யப்பட்டது.
இந்நிலையில், காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் வளாகத்தில் தங்கத்தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தங்கத் தேரினை அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் ஒப்படைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சிபுரம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள அனைவருக்கும் பிரசித்தி பெற்றது என தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் உள்ள 3 முக்கிய கோயில்களான காமாட்சியம்மன் கோயிலுக்கு ஜெயேந்திர சரஸ்வதி சாமிகளின் சங்கல்பத்துடன் தங்கத்தேரும், வரதராஜ பெருமாளுக்கு மரத்தேரும் செய்யப்பட்டு வழங்கப்பட்டதாக கூறினார்.
ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் சங்கல்பம் செய்யப்பட்ட ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மக்களின் பங்களிப்புடன் தங்கத்தேர் செய்யப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
















