புதுச்சேரி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி உப்பளம் பகுதியில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வரும் சகோதரிகள், முதியவர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகள், போக்குவரத்து விதிகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும் என்றும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி உரிய அனுமதி பெறாமல் சாலையோரங்களில் பேனர் வைக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார்.
மக்கள் சந்திப்பு நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், வாகனங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றின் அருகே பொதுமக்கள் செல்லக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தவெக தலைவர் ஒப்புதலுடன் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டர்கள், பொதுமக்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.
















