ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான லட்சுமி என்பவர் கணவர் உயிரிழந்த நிலையில் மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 30ஆம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த லட்சுமியின் 17 வயது மகள் கௌரியை பாம்பு கடித்ததாகக் கூறப்படுகிறது.
உத்திரகோசமங்கையில் உள்ள மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக 12ஆம் வகுப்பு மாணவி கௌரி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒரு வாரமாகச் சிகிச்சை பெற்று வந்த மாணவி கௌரி உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாகத் தெரிவித்துள்ளது.
பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவர்கள் முறையாகச் சிகிச்சை அளிக்கவில்லையென உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
உரிய நேரத்தில் பாம்புக்கடிக்கான தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் மாணவியைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும், அரசு மருத்துவமனையின் அலட்சியதால் ஒரு உயிர் பலி வாங்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், உயிரிழப்புக்குக் காரணமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















