அமெரிக்கா – வெனிசுலா இடையே போர்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளார் அதிபர் நிகோலஸ் மதுரோ… அமெரிக்க ஏகாதிபதியத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலா, கச்சா எண்ணெயை அதிகளவில் இருப்பு வைத்துள்ள நாடாக உள்ளது. 2023 ஆய்வுப்படி வெனிசுலா 303 பில்லியன் பீப்பாய் எண்ணெய் வளத்துடன் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. சவுதி அரேபியா, ஈரான், கனடா, ஈராக் போன்ற நாடுகள் அடுத்த நான்கு இடங்களில் உள்ளன.
வெனிசுலா எரிபொருளை அதிகளவில் கொண்டிருப்பது அமெரிக்காவின் கண்ணை உறுத்திவந்தது. இந்நிலையில், வலுக்கட்டாயமாகப் போரை திணித்து வெனிசுலாவின் வளங்களை கொள்ளையடிக்க அமெரிக்கா திட்டம் தீட்டி வருவதாகக் கூறப்படுகிறது. வெனிசுலா தங்கள் நாட்டிற்குள் போதை மருந்துகளைக் கடத்திவருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், சந்தேகத்துக்குரிய கப்பல்கள் மீது அமெரிக்கா அடுத்தடுத்து தாக்குதலையும் நடத்தி வருகிறது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து, தென் கரீபியன் பகுதியில் சுமார் 20 வேகப் படகுகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 80-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, கப்பல்களில் பயணித்தவர்கள் மீனவர்கள், தொழிலாளர்கள் என்றும், சர்வதேச சட்டத்தை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
ஆனால் அதையெல்லாம் காதில் வாங்காத அமெரிக்கா தனது அதிகார பசியால், கரீபியன் கடற்பகுதியில் போர்க் கப்பல்கள், போர் விமானங்களை குவித்து வருகிறது. அத்துடன், உலகின் சக்தி வாய்ந்த யு.எஸ்.எஸ்.ஜெரால்ட் ஆர் போர்ட் என்ற விமானம் தாங்கிப் போர்க் கப்பலை அனுப்பி வைத்துள்ளது. இது, போருக்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்த வெனிசுலா, பதிலடி கொடுக்க ஆயத்தமாகி வருகிறது. சிறப்பு அவசரநிலையை அறிவித்துள்ள வெனிசுலா, ‘பிளான் இன்டிபென்டென்சியா 200’ என்ற திட்டத்தின் கீழ், நிலம், கடல், வான்வெளியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து பெற்ற வான் பாதுகாப்பு அமைப்புகளையும், ஏவுகணைகளையும் எல்லையில் தயாராக நிறுத்தியுள்ளது.
வெனிசுலாவின் ஆயுதப்படைகள் 5600 புதிய வீரர்களை அவசரமாகப் படையில் சேர்த்திருக்கிறது.தலைநகரின் மிகப்பெரிய ராணுவ தளமான ஃபியூர்டே டியுனாவில் நடைபெற்ற துருப்பு சேர்ப்பு விழாவில் பேசிய அதிபர் நிகோலஸ் மதுரோ, ஆட்சேர்ப்பை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய கர்னல் கேப்ரியல் ரெண்டன், எந்தவொரு சூழ்நிலையிலும் ஏகாதிபத்திய சக்தியின் படையெடுப்பை வெனிசுலா அனுமதிக்காது என்று கூறினார். வெனிசுலாவில் இரண்டு லட்சம் வீரர்கள் உள்ள நிலையில், கூடுதலாக 2 லட்சம் காவல்துறையினர் சேர்க்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வெனிசுலாவில் அரசியல் சூழல் மோசமான நிலையில்தான் உள்ளது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய தேர்தல், மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில்தான் மதுரோ மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்றார். அப்போது நடந்த போராட்டங்களில் 28 பேர் கொல்லப்பட்டனர். 2400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மரியா கொரினா மச்சாடோ, இதனை கண்டித்தார். அரசு தொடர்ச்சியான அடக்குமுறையை கையாள்வதாக குற்றம்சாட்டியிருந்தார். இப்படியாக உள்நாட்டு அரசியல் ஒருபக்கம் இருக்க, தற்போது அமெரிக்காவை எதிர்க்க வேண்டிய நிர்பந்தம் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ளது… அமெரிக்காவின் நோக்கம், தங்களது எண்ணெய் இருப்புக்களைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறியுள்ள வெனிசுலா, அதை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.
















