பேருந்துகள் நடுரோட்டில் பழுதடைந்து நிற்பதையும், அதனை தள்ளிச் செல்வதையும் நாம் தமிழகத்தில் பரவலாகக் கேட்டிருப்போம், பார்த்திருப்போம்.
ஆனால் ஒரு பிரமாண்ட ஹெலிகாப்டர் சேற்றில் சிக்கி, அதை அனைவரும் தள்ளிவிடும் சுவாரஸ்யமான சம்பவம் இலங்கையில் நிகழ்ந்துள்ளது.
நமக்கு அண்டை நாடான இலங்கை டிட்வா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இலங்கைக்கு தேவையான உதவிகளைச் செய்ய இந்தியா முன்வந்தது. இதனால் இலங்கைக்கு பேரிடர் மீட்பு படை வீரர்களையும், நிவாரணப் பொருட்களையும் இந்தியாவில் இருந்து அனுப்பி வைத்தது மத்திய அரசு.
இந்நிலையில், அங்கு நிவாரணப் பணிக்காகச் சென்ற இந்திய ராணுவத்தின் MI-171 ஹெலிகாப்டர் ஒன்று, சேற்றில் சிக்கி நகர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து ஹெலிகாப்டரை தள்ளிச் சென்றனர்.
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதற்கேற்ப, அனைவரின் முயற்சியால் ஹெலிகாப்டர் மெதுமெதுவாக நகர்ந்து செல்லும் வீடியோ, இணையவாசிகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
















