பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகளைப் பிரிட்டனில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ள இங்கிலாந்துக்கு ஒரு புதிய திட்டத்தைப் பாகிஸ்தான் அரசு முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள புதிய திட்டம் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இங்கிலாந்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் வம்சாவளியினரின் நெட்வொர்க் இருப்பதாக அந்நாட்டு நீதிமன்றத்தால் உறுதி செய்யப் பட்டுள்ளது. 1990ம் ஆண்டுகளில் இருந்தே இந்த நெட்வொர்க்கில் உள்ள பாகிஸ்தான் ஆண்கள், நீண்டகாலமாகவே வெள்ளை மைனர் சிறுமிகளைக் குறிவைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். ரோதர்ஹாம், ரோச்டேல், ஓல்ட்ஹாம் மற்றும் டெல்ஃபோர்ட் போன்ற நகரங்களில் சிறுமிகள் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
ஒரே இரவில் 40 பாகிஸ்தான் ஆண்களால் சீரழிக்கப்பட்ட சிறுமியின் கதை பாகிஸ்தானியர்களின் பாலியல் வன்கொடுமைக்குச் சான்றாக உள்ளது. இங்கிலாந்தில் நடந்த இது போன்ற பாலியல் மோசடி மற்றும் வன்கொடுமை சம்பவங்களின் எண்ணிக்கையின் அளவு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 2012ம் ஆண்டுக்கு முன் இது தொடர்பான வழக்கு நடந்து தீர்ப்பும் வழங்கப் பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பாலியல் குற்றவாளிகளான பாகிஸ்தானியர்களை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப் பட்டு வருகிறது. எனினும், பாகிஸ்தான் குடியுரிமை இல்லாததால் அவர்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறி பாலியல் குற்றவாளிகளை பாகிஸ்தான் அரசு ஏற்க மறுத்து விட்டது. கடந்த ஆண்டு, பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு உதவும் ஊழல் அதிகாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க நிதியளிப்பதாக உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவருமான எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதியளித்திருந்தார்.
மேலும் இதுவரை இரண்டரை லட்சம் வெள்ளையின சிறுமிகள் பாகிஸ்தானியர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டிருந்தார். கடந்த ஜூன் மாதம் இது தொடர்பாகஒரு சட்டப்பூர்வ தேசிய விசாரணைக்குப் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உத்தரவிட்டார். மேலும், காரி அப்துல் ரவூப் மற்றும் அடில் கான் போன்ற இந்தப் பாலியல் வன்முறை கும்பலின் உறுப்பினர்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. கடந்த டிசம்பர் 4ம் தேதி, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி இங்கிலாந்து உயர் ஆணையரை சந்தித்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அந்த சந்திப்பின் போது, பாகிஸ்தான் பாலியல் குற்றவாளிகளைத் திரும்பப் பெறுவதற்கான ஒரு புதிய திட்டத்தை அரசு தரப்பில் முன் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, பாகிஸ்தானின் தலைமை இராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனீருக்கு எதிராகக் கருத்துக்களை வெளியிட்டு வரும் இரண்டு முக்கிய நபர்களை ஒப்படைப்பதாக இருந்தால், இங்கிலாந்திலிருந்து பாலியல் குற்றவாளிகளை திருப்பி அனுப்புவதை ஏற்றுக்கொள்வதாகப் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளரான ஷாஜாத் அக்பர் மற்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியாக இருந்து அடில் ராஜா ஆகிய இருவரும் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை ஒப்படைக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசிடம் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி வலியுறுத்தியதாகத் தெரியவருகிறது.
இவர்கள் இருவரும் அசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பையும் கடுமையாக விமர்சித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக பாகிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்கும் முறையான கைதிகள் ஒப்படைப்பு ஒப்பந்தம் இல்லை. ஆனால், 2003 ஆண்டின் திருத்தப்பட்ட இங்கிலாந்து ஒப்படைப்புச் சட்டத்தின் சிறப்பு பிரிவு தற்காலிக ஒப்படைப்புக்கு அனுமதி அளிக்கிறது.
















