அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே மீண்டும் எல்லை ராணுவப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. இரு நாட்டு எல்லையில் அமைந்துள்ள கோவில் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை தீர்க்கப்படாமலே உள்ளது. கம்போடியா பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தபோதே தாய்லாந்துடன் சச்சரவு தொடங்கியது.
2008ஆம் ஆண்டில், இரு நாடுகள் இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியில் அமைந்துள்ள 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில் ஒன்றை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகக் கம்போடியா பதிவு செய்ய முயன்றது. இந்த ப்ரே விஹார் என்ற சிவாலயத்தை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக மாற்றத் தாய்லாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பின் இரு நாடுகளுக்கும் இடையே பலமுறை எல்லை மோதல்கள் ஏற்பட்டதில், இரு தரப்பிலும் பல இராணுவ வீரர்களும் பொதுமக்களும் உயிரிழந்தனர்.
தொடர்ந்து, கம்போடிய மக்களின் நம்பிக்கைக்குரிய முக்கியமான ப்ரே விஹார் கோவில் இருக்கும் ஒரு பகுதியை தாய்லாந்து ஆக்கிரமித்துள்ளதாக, சர்வதேச நீதிமன்றத்தில் கம்போடியா புகார் அளித்தது. தாய்லாந்தின் எதிர் வாதங்களை நிராகரித்த சர்வதேச நீதிமன்றம், கம்போடியாவின் எல்லைக்குள்ளேயே ப்ரே விஹார் கோவில் இருப்பதாகவும் தீர்ப்பு வழங்கியது. அத்துடன், அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத் துருப்புக்கள் அனைத்தையும் தாய்லாந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், 1954க்கு பிறகு கோவிலில் இருந்து அகற்றப்பட்ட அனைத்தையும் கம்போடியாவிற்குத் திருப்பித் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பையும், கூட்டு எல்லை நிர்ணய ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தையும் தாய்லாந்து இன்றும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் இருநாட்டுக்கும் இடையே ஐந்து நாட்கள் தீவிரப் போர் நடந்தது. இதில் இரு தரப்பிலும் சுமார் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். எல்லையின் இருபுறமும் சுமார் இரண்டு லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டன. கம்போடியா மீது தாய்லாந்து விமான தாக்குல் நடத்தியதை தொடர்ந்து தற்போது மீண்டும் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதொடர்பாகப் பேசியசிய தாய்லாந்து ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் Winthai Suvaree வின்தாய் சுவரீ, எல்லையில் தாய்லாந்து ராணுவ வீரர்களைக் குறிவைத்து கம்போடிய இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அந்தத் தாக்குதலில் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கம்போடியாவின் தாக்குதலைத் தொடர்ந்தே கம்போடியாவின் இராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப் பட்டதாகவும் கூறியுள்ளார். சுமார் 3,85,000க்கும் அதிகமான பொதுமக்களை எல்லை மாவட்டங்களில் இருந்து தாய்லாந்து ராணுவம் வெளியேற்றியுள்ளது. இது மொத்த எல்லையோர மக்களில் 70 சதவீதம் ஆகும். மேலும் சுமார் 35,000க்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து ராணுவம் தான் முதலில் தாக்குதலைத் தொடங்கியதாக தெரிவித்துள்ள கம்போடிய இராணுவம் தாங்கள் தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், அமைதியைச் சீர் குலைக்கும் நடவடிக்கைகளை தாய்லாந்து உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வரும் தாய்லாந்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கம்போடியா அரசு, தங்கள் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளைத் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது. தொடரும் ரஷ்யா – உக்ரைன் போர், முடியாமல் நீடிக்கும் இஸ்ரேல் ஹமாஸ் போர் என உலகமெங்கும் போர் சூழ்ந்துள்ள நிலையில், தாய்லாந்து – கம்போடியா நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
















