மலிவு விலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு வரிவிதிக்கப் போவதாக அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதற்கான பின்னணி காரணம் என்ன? என்பது பற்றிய செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
உலகளவில் முன்னணி அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா தான் உள்ளது. உலக மொத்த அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 30 சதவீதத்துக்கும் அதிகமாகும். இந்தியாவின் பாஸ்மதி அரிசி வகைகளுக்கு உலக சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளன. குறிப்பாக, கடந்த ஆண்டு மட்டும் 2.34 லட்சம் டன் அரிசியை இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது. அதிபரான உடனேயே சர்வதேச நாடுகள் மீது வர்த்தக போரைத் தொடங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அனைத்து நாடுகள் மீதும் பரஸ்பர வரிகளை விதித்தார்.
இந்தியாவுக்கு முதலில் 25 சதவீத வரி விதித்த அதிபர் ட்ரம்ப், தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதைக் காரணம் காட்டி கூடுதலாக 25 சதவீத வரி என்று மொத்தம் 50 சதவீத வரி விதித்துள்ளார். அமெரிக்க அரசின் இந்த வரிவிதிப்பால், இந்தியாவின் ஜவுளிதுறை, தோல்துறை மற்றும் கடல் உணவுத் துறை கடுமையாகப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மாற்று சந்தையை உருவாக்கி, நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தைச் சீர் செய்தது. மேலும் அமெரிக்கா தவிர்த்துப் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளுடனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 23-வது இந்திய- ரஷ்ய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு வந்த ரஷ்ய அதிபர் புதின், இந்தியாவுடனான உறவு மேலும் வலிமை பெறும் என்று கூறியிருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கியமான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும், எந்த நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் அதிக லாபமோ, அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு முழு உரிமையும் இந்தியாவுக்கு உண்டு என்று ரஷ்யா தெரிவித்திருந்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில், அமெரிக்க விவசாயிகளுக்கான 12 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை அளித்த ட்ரம்ப் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளால் மட்டுமின்றி குறைந்த விலையில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உரங்களாலும் பாதிக்கப்படுவதாக அமெரிக்க விவசாயிகள், தெரிவித்தனர். ஏற்கெனவே கனடா மீது வரி விதித்த போதும், பொட்டாஷ் மற்றும் யூரியா உள்ளிட்ட சில உரங்களுக்கு ட்ரம்ப் விலக்கு அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அதிபர் ட்ரம்ப், கனடா உரத்துக்குக் கடுமையான வரி விதிக்கப் போவதாக எச்சரித்ததோடு, இந்திய அரிசிக்கும் கூடுதலாக வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அமெரிக்காவில் அதிகரித்து வரும் விலைவாசி மற்றும் தொடர்ச்சியான பணவீக்கம் என ட்ரம்பின் வர்த்தக கொள்கையால் அமெரிக்கர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சியினர் 220 இடங்களையும் ஜனநாயகக் கட்சியினர் 213 இடங்களையும் கொண்டுள்ளனர். விரைவில் நடைபெற உள்ள இடைக்காலத் தேர்தல்களில் அனைத்து இடங்களிலும் ட்ரம்பின் கட்சி தோல்வியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுழலில் விவசாயிகளின் கோரிக்கையைக் கேட்ட ட்ரம்ப், இந்திய அரிசிக்கும், கனடா உரத்துக்கும் வரி விதிக்கப் போவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய- அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க குழு அடுத்தவாரம் இந்தியா வரவிருக்கும் நிலையில், அதிபர் ட்ரம்பின் இந்த எச்சரிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
















