சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் தீர்மான நோட்டீசை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி எம்பிக்கள் மக்களவை சபாநாயகரிடம் அளித்துள்ளனர்இந்தத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமா? தோல்வியடையுமா? இதற்கான நடைமுறைகள் என்ன? என்பபற்றிப் பார்ப்போம்.
நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்ற நீதிபதிகளை பதவிநீக்கம் செய்ய அரசியலமைப்பு சட்டம் வழி வகை செய்கிறது. அந்த வகையில் இந்தியாவில் இது வரை எந்த ஒரு நீதிபதியும்நாடாளுமன்ற தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படவில்லை.
இதுவரை எந்த எந்த நீதிபதிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் மூலம் பதவி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை பார்க்கலாம். 1993ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது, ஆனால் தீர்மானம் வெற்றி பெறுவதற்கான போதிய பெரும்பான்மை இல்லாததால் தோற்றுப்போனது. தொடர்ந்து 2011ம் ஆண்டு, கொல்கத்தா உயர்நீதி மன்றத்தின் நீதிபதியாக இருந்த செளமித்ர சென் நிதியை கையாடல் செய்ததாக தெரிவித்து அவரை பதவி நீக்க செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் தீர்மானத்தை எடுத்து கொள்வதற்கு முன்பாக அவர், நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதே ஆண்டு சிக்கிம் மாநிலத்தின் தலைமை நீதிபதியாக இருந்த பி.டி தினகரன் மீது ஊழல் குற்றச்சாட்டுக்காக பதவி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாநிலங்களவையில் நீதிபதிகள் குழு விசாரணைக்கு உத்திரவிடப்பட்ட பின்னர் பி.டி. தினகரன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
2015ம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெ.பி.பரிதிவாலாவை பதவி நீக்கம் செய்வதற்கு 58 மாநிலங்களவை உறுப்பினர்கள் தீர்மானத்தை கொண்டு வந்தனர். இடஒதுக்கீடு குறித்து ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களை தெரிவித்தற்காக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
2017ம் ஆண்டு ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. நாகர்ஜுன ரெட்டியை பதவி நீக்கம் செய்ய மாநிலங்களவை உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். குறைந்தளவு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் கைவிடப்பட்டது. 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ர மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிலர் வழக்குகளை பட்டியலிடுவது தொடர்பாக குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
இதை தொடர்ந்து, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்தனர். மாநிலங்களவை துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, இது நீதிமன்ற நடைமுறை தொடர்பானது என்றும், நீதிபதியின் நடத்தை மீதான குற்றசாட்டுகள் அல்ல என்றும் தெரிவித்து தீர்மானத்தை நிராகரித்துவிட்டார்.
2025ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வர்மாவின் இல்லத்தில் எரிந்த பணக்கட்டுகள் எடுக்கப்பட்டதை அடுத்து அவர் மீது பதவி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்தனர். பின்னர், நீதிபதிகள் உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய குழுவின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
















