தமிழக அரசு பிடிவாதமாக இருப்பதால், சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவுக்கு அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவமனைகள், பயிற்சி மையங்களை ஒருங்கிணைத்து சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்கும் மசோதா 2022ல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவில், பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்கு பதிலாக, முதலமைச்சர் செயல்படுவார் என்றும், துணை வேந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனங்களுக்கு முதலமைச்சர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. யுஜிசி விதிக்கு மாறாக பல்கலை வேந்தராக முதலமைச்சர் செயல்படுவார் என்பது குறித்து தமிழக அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டிருந்தார்.
அதற்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில் திருப்தி அளிக்காததால் சித்தா பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாவை கடந்தாண்டு ஆளுநர் திருப்பி அனுப்பினார். ஆனால், மசோதாவில் எவ்வித திருத்தம் மேற்கொள்ளாமல் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்த அக்டோபர் 15ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. 2வது முறையாக அனுப்பப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், குடியரசு தலைவருக்கு அனுப்பிவிட்டார்.
இந்நிலையில், தமிழக அரசின் பிடிவாதத்தால் தான், மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என இந்திய மருத்துவ முறை மருத்துவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மசோதாவில் சில திருத்தங்களை செய்தால் ஆளுநரின் ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும், அரசு பிடிவாதங்களை தளர்த்தி மற்ற பல்கலைக்கழகங்கள் போல் வேந்தராக ஆளுநரை நியமிக்கும் வகையில், மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், சித்தா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடுதான் மாற வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















