S.I.R விவகாரத்தில் மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தான் தோல்வியடையும் மாநிலத்தில் மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம்சாட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
வாக்கு திருட்டால் தான் தேர்தலில் நேருவும், இந்திரா காந்தியும் வெற்றி பெற்றதாக அவர் விமர்சித்தார். சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற முதல் தேர்தலில் பெரும்பாலான மக்கள் வல்லபாய் பட்டேலுக்கு வாக்களித்தும், நேருதான் பிரதமர் ஆனதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அமித்ஷா, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீசுக்கு கண்டனம் தெரிவித்தார். தங்களின் வாக்கு வங்கியை காப்பாற்றவே திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார். வாக்கு வங்கிக்காகவே எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் அதில் கையொப்பம் இட்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற முடியாமல் எதிர்க்கட்சியினர் தேர்தல் முறைகளை குறை சொல்வதாகவும் அவர் விமர்சித்தார். தொடர்ந்து அமித்ஷாவின் விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சியினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் பேசிய அவர், விவாதத்திற்கு பயந்து ராகுல்காந்தியை போன்று ஓடக் கூடியவர்கள் யாரும் இல்லை என கிண்டலடித்தார். மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாதென கூறுவதா? என்றும் அமித்ஷா கேள்வி எழுப்பினார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு பதவி கொடுக்க கூடாதென அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பிய அமித்ஷா, இந்திய நாட்டின் பிரதமர் மோடியும் ஆர்எஸ்எஸ் காரர்தான் என்று கூறினார்.
மேலும் பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைக்கும் போதெல்லாம் வெற்றி பெறுவது பாஜகதான் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். பீகாரை போல், மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும் இண்டி கூட்டணி தோல்வி அடையும் என்றும் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.
















