நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பு இயங்குவதாக அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டை ஒட்டி, நாடு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. , சென்னை, திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இளைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மோகன் பகவத் பங்கேற்று பேசினார்.
அப்போது, ஆர்எஸ்எஸ் இயக்கப்பணி 100 ஆண்டுகளை கடந்துள்ளது. இத்தனை நாட்கள் இந்த இயக்கம் என்ன செய்துள்ளது என்பது மக்களுக்கு பெருமளவு தெரியவில்லை. ஆர்எஸ்எஸ் பற்றி தெரிந்து கொள்ள மக்கள் விக்கிபீடியாவை நாடுகின்றனர்.
அதில் இருக்கும் தகவல்கள் முற்றிலும் உண்மையில்லை. அமைப்பின் பணிகள் குறித்து மக்கள் நேரடியாக அறிந்து கொள்ள வேண்டும். உண்மையை மக்கள் அறிய வேண்டும் என எண்ணுகிறேன். மக்கள் நேரடியாக அமைப்பை பற்றி புரிந்து கொள்வது அவசியம் என தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு யாரும் போட்டியாளர்கள் கிடையாது. நாட்டை முன்னேற்றுவதற்காகவே இயங்குகிறது. அதுவே இந்த அமைப்பின் அடிப்படை கொள்கை. என்றும் அவர் கூறினார்.
வந்தே மாதரம் சொல்பவர்கள் மன்னிப்பு கேட்கும் சூழல் நிலவியது. நம் தாய் நாட்டை வணங்க நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஹெட்கேவார் கேள்வி எழுப்பினார். ராஜஸ்தான் முதல் தெலுங்கானா வரை ஒரு இயக்கத்தை வழிநடத்தினார். கோல்கட்டாவில் மருத்துவ பட்டம் பெற்ற அவர் ஆங்கிலேயர்களிடம் பணியாற்ற மறுத்தார். தாய்நாட்டுக்கு பணியாற்றவே விரும்பினார் என்றும் அவர் தெரிவித்தார்.
பல ஆண்டு பரிசோதனைக்கு பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பை ஹெட்கேவார் நிறுவினார். சிஸ்டம் சரியானால் சமூகம் சரியாகும் எனஅவர் நம்பினார். தனி மனித மாற்றத்துக்கு சமூக பொறுப்பு அவசியம். சமூக மாற்றம் ஏற்பட்டால் தான் நன்மை விளையும் என நம்பினார். பல மொழிகள் கலாசாரம் உள்ள இந்நாட்டு மக்களை எப்படி ஒருங்கிணைப்பது என அவர் சிந்தித்தார். பல வேறுபாடுகள் இருப்பினும், நம் அனைவருக்குமான நாடு ஒன்று என்றும் மோகன் பகவத் தெரிவித்தார்.
இன்று நான்கு வகை ஹிந்துக்கள் உள்ளனர். ஒரு சிலர் ஹிந்து என்பதில் பெருமை கொள்கின்றனர். சிலர் அதில் என்ன இருக்கிறது என்கின்றனர். சிலர் அதை சொல்லவே தயங்குகின்றனர். சிலர் தாங்கள் ஹிந்துக்கள் என்பதையே மறந்துவிட்டனர். யாரெல்லாம் ஹிந்துக்கள் என அழைக்கப்படுகிறார்களே அவர்களை ஒருங்கிணைப்பது அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பாரதத்தின் மீதான பக்தி, முன்னோர் மீதான பக்தி கலாசாரத்தை போற்ற வேண்டும். அதுவே நம் தர்மம். நமது கலாசாரம் என்பது கங்கையை போன்றது தடையின்றி தொடர்ந்து பயணிப்பது. ஆர்எஸ்எஸ் என்பது மக்களை ஒருங்கிணைக்கும் சக்தி பெற்ற அமைப்பாகும். இந்த இயக்கம் தனி மனித ஒழுக்கத்தை மேம்படுத்துகிறது என்றும் மோகன் பகவத் தெரிவித்தார்.
















